லேப்டாப், டேப்லெட் போன்றவற்றின் இறக்குமதியை தடை செய்த இந்தியா… உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி உலகத்தரத்திற்கு இந்தியாவை மேம்படுத்த முயற்சி!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணிணிகளுக்கு தடை விதித்து இனி இவை இறக்குமதி செய்யப்படாது என்றும் இந்த முடிவானது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் இந்திய அரசு நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
உள்ளூர் உற்பத்தியைத் தூண்டும் முயற்சியில், லேப்டப், டேப்லெட்டுகள் மற்றும் தனிப்பட்ட கணினிகளின் இறக்குமதியை இந்தியா உடனடியாகக் கட்டுப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஏற்கனவே இறக்குமதிகளுக்காக பெறப்பட்ட ஒப்பந்தத்தின் உரிமம் செல்லுபடி ஆகும் வரை இறக்குமதிகளுக்கு அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல்-ஜூன் மாதத்தில், லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதிகள் 19.7 பில்லியன் டாலர்களாக இருந்தது. மேலும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதி வருடத்திற்கு வருடம் சுமார் 6.25% அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும், நாட்டின் மொத்த சரக்கு இறக்குமதியில் 7% முதல் 10% வரை எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இறக்குமதி செய்வதை காட்டிலும் இந்த உற்பத்தினை நம் உள்நாட்டிலேயே செய்தால் நாட்டின் வருவாயை பெருக்கலாம் என்றும், இறக்குமதி செலவினை குறைக்கலாம் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவானது இந்தியா மேற்கொண்டுள்ள ஒரு மகத்தான முடிவு என எலக்ட்ரானிக்ஸ் துறை அமைப்பான MAIT இன் முன்னாள் இயக்குநர் ஜெனரல் அலி அக்தர் ஜாஃப்ரி கூறினார்.
எலக்ட்ரானிக்ஸ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியைத் அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனை ஒட்டி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் போன்ற தயாரிப்புகளை உள்ளடக்கிய IT வன்பொருள் உற்பத்தியில் பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதன் $2-பில்லியன் உற்பத்தி ஊக்கத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான வருடாந்திர உற்பத்தியை இலக்காகக் கொண்டு, உலகளாவிய மின்னணு விநியோகச் சங்கிலியில் அதிகார மையமாக மாறுவதற்கான இலக்கை மையமாகக் கொண்டு இந்தியா இந்த முடிவிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.