வளைகுடா செய்திகள்

நடப்பு ஆண்டில் ஓமானிற்கு வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 23.5% உயரும்..!! ஆய்வில் தகவல்..!!

ஓமானில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதுவித முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஆண்டு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.5 % வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் சார்ந்த புள்ளி விவரங்களைத் தரும் ஃபிட்ச் சொல்யூஷன்ஸுடன் இணைந்த நிறுவனமான BMI இதுவரை கணிக்கப்பட்ட காலாண்டு அறிக்கைகளை கணக்கில் கொண்டு, இந்த வருடத்தின் நான்காவது காலாண்டினையும் கணித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓமானிற்கு வருகை தரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 3.6 மில்லியனைத் தொடும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். அத்துடன் பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் (MHT) 2040 ஆம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 11 மில்லியன் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வகையில் ஒரு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது.

இந்தத் திட்டமானது புதிய சுற்றுலா மற்றும் பாரம்பரியத் திட்டங்களைக் கொண்டிருப்பதால், இந்தத் துறையில் மொத்த முதலீடுகளின் அளவை உயர்த்த பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சுற்றுலா அமைச்சகமானது சர்வதேச அளவில் சுற்றுலா துறையில் மேம்படுத்தப்படும் செயல் திறன்களை கண்காணித்து அதை உள்நாட்டில் விரிவு படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை ஓமான் 31 சதவீதம் வளர்ச்சியினை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும் பொழுது ஐக்கிய அரபு அமீரகமானது 29 சதவீதம் வளர்ச்சியையும் ஜோர்டான் நாடு 7% வளர்ச்சியையும் எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை பொறுத்த வரை, அடுத்த பன்னிரெண்டு மாதங்களில் உலகப் பொருளாதாரச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற நிலை காரணமாக, உலகளாவிய சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை அச்சுறுத்தும் சில அபாயங்கள் உள்ளன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அபாயங்களில் பொருட்களின் விலை உயர்வு, உணவு மற்றும் எரிபொருள், எரிசக்தி விலை பணவீக்கம் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள் ஆகியவற்றின் விளைவுகள் அடங்கும். எனவே, இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டிற்குள் சுற்றுலா துறையில் அதிகபட்சமான முதலீடுகளை இருப்பதில் ஓமான் கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!