ஓமானில் கடந்த ஆண்டு மட்டும் 4,000க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியீடு..!!

ஓமானில் கடந்த 2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தீ விபத்துக்கள் பற்றிய புள்ளி விவரங்களை தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் (NCSI)வெளியிட்டுள்ளது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் ஓமானில் மொத்தம் 4186 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதில் பெரும்பாலான விபத்துக்கள் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களின் அஜாக்கிரதையின் காரணமாகவும் அல்லது எதிர்பாராத விதமாகவும் நடந்த விபத்துகளாகும். இந்த எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் பொழுது 1,345 விபத்துக்கள் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து வாகனங்களின் மூலம் 930 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வணிக நிறுவனங்களில் 302 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
விபத்துகளுக்கான காரணங்களை பொறுத்தவரை கழிவு பொருட்களின் மூலம் ஏற்பட்ட தீயின் காரணமாக 839 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மின் சாதனங்கள் மற்றும் மின்சார கம்பங்களின் மூலம் 234 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளில் உள்ள சாதனங்களின் காரணமாக 41 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், வழிபாட்டு தலங்களில் 8 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஓமானில் விபத்து நடந்த இடங்களை கருத்தில் கொள்ளும் பொழுது மஸ்கட் கவர்னரேட்டில் 1307 விபத்துகளும், வடக்கு அல் பதீனா கவர்னரேட்டில் 949 விபத்துகளும், அல் தகீலியா மாகாணத்தில் 435 விபத்துகளும், தெற்கு அல் பதீனா பகுதியில் 367 விபத்துகளும், தோஃபாரில் 349 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
இவை மட்டுமல்லாமல் தெற்கு அல் ஷர்கியா கவர்னரேட்டில் 235 விபத்துகளும், அல் தாஹிரா மாகாணத்தில் 180 விபத்துகளும், வடக்கு அல் ஷர்கியா கவர்னரேட்டில் 177 விபத்துகளும், புரைமி கவர்னரேட்டில் 109 விபத்துகளும், முசந்தம் கவர்னரேட்டில் 40 விபத்துகளும்,அல் வுஸ்டா மாகாணத்தில் 38 விபத்துகளும் பதிவாகியுள்ளன எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.