GCC நாடுகளுக்கிடையே குடியிருப்பாளர்கள் பயணிக்க ‘ஒற்றை GCC விசா’.. அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் தகவல்..!!

வளைகுடா நாடுகளில் (GCC) வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிப்பதை எளிதாக்கவும், வளைகுடா நாடுகளில் சுற்றுலாவை மேம்படுத்தவும் ‘ஒற்றை விசா’ செயல்முறையை அறிமுகப்படுத்த முயற்சி எடுத்து வருவதாக அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் தூக் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 27 ம் தேதி அபுதாபியில் நடைபெற்ற எதிர்கால விருந்தோம்பல் உச்சி மாநாட்டில் (Future Hospitality Summit) கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மர்ரி, வளைகுடா நாடுகளுக்கிடையேயான புதிய ஒற்றை விசா செயல்முறை வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
தற்போது, GCC நாடுகளின் குடிமக்கள் மட்டுமே அதன் உறுப்பு நாடுகளான UAE, சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன், குவைத், மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு உறுப்பு நாடுகளுக்கும் பயணிப்பதற்கு அந்தந்த நாடுகளிடம் இருந்து விசா பெற விண்ணப்பிக்க வேண்டும். அவர்களில் சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு மட்டுமே விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதற்குப்பதிலாக, ஒற்றை விசா (pan-GCC single visa) நடைமுறைக்கு வந்தால் GCC குடியிருப்பாளர்கள் அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே சுதந்திரமாக பயணம் செய்யலாம். உதாரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் ஒற்றை விசா மூலம் சவுதி அரேபியா, ஓமான் உள்ளிட்ட GCC நாடுகளுக்குள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அல் மர்ரி விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், அமீரகம் பல ஆண்டுகளாக இந்த வகையான சுற்றுலாவிற்கு இடமளிக்கும் வகையில் ஒரு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அல் மர்ரி கூறியுள்ளார். அவ்வாறு GCC உறுப்பு நாடுகளில் அமீரகம் தன்னை சுற்றுலாத் துறையில் முன்னணியில் நிலைநிறுத்திக் கொண்டாலும், கத்தார் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் உலகளாவிய பயணிகளை ஈர்க்க உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதாகவும், இது ஆரோக்கியமான மற்றும் முக்கியமான முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, பஹ்ரைனின் சுற்றுலா அமைச்சர் பாத்திமா அல் சைராபி, சுற்றுலாப் பயணிகளுக்கான GCC அளவிலான “Schengen-style” விசாவிற்கான திட்டங்களை சில மாதங்களுக்கு முன்பு வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி, அரேபிய பயணச் சந்தையின் போது ஒற்றை விசாவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் அளவிலான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனவே, இந்த ஒருங்கிணைந்த GCC விசா செயல்முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று வளைகுடா நாடுகளின் பல தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு இந்த செயல்முறை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இது வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.