அமீரக செய்திகள்

அமீரகத்தில் இருந்து முசந்தம் நகருக்கு முதன் முறையாக பொது பேருந்து சேவையை தொடங்கிய எமிரேட்..!! இனி எளிதாக சுற்றுலா செல்லலாம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஓமானில் உள்ள மிகவும் பிரபலமான முசந்தம் நகரத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் குடியிருப்பாளர்களுக்கு வசதியாக முதன்முறையாக பொது பேருந்து சேவையை ராஸ் அல் கைமா எமிரேட் அறிமுகம் செய்துள்ளது. ராஸ் அல் கைமாவின் போக்குவரத்து ஆணையத்தால் (RAKTA) ராஸ் அல் கைமா எமிரேட் மற்றும் முசந்தம் கவர்னரேட்டிற்கு இடையே தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையே RAK எமிரேட்டின் முதல் சர்வதேச பொது பேருந்து சேவையாகும்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தனிநபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், முசந்தம் நகராட்சியுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் RAKTA கையெழுத்திட்டதையடுத்து இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்த ஒப்பந்தமானது, முசந்தம் கவர்னரேட்டின் தலைமையகத்தில் முசந்தம் கவர்னர் சையத் இப்ராஹிம் பின் சையத் பின் இப்ராஹிம் அல் புசைதி அவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. மேலும், RAKTA சார்பாக டைரக்டர் ஜெனரல் Eng. இஸ்மாயில் ஹசன் அல் புளூஷி அவர்களும், முசந்தம் கவர்னரேட் தரப்பில் முசந்தம் முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் Eng. நாசர் அல் ஹொசானி அவர்களும் ஒப்பந்தத்தத்தில் கையெழுத்திட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து RAKTA இன் டைரக்டர் ஜெனரல் அல் புளூஷி பேசுகையில், புதிய பேருந்து சேவையின் நோக்கம், பயணிகளுக்கு தரைவழி போக்குவரத்து சேவையை வழங்குவதும், பாதுகாப்பான, நம்பகமான மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து முறைகளை வழங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே கூட்டுப் போக்குவரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, முசந்தம் கவர்னரேட் முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் Eng. நாசர் அல் ஹோசானி பேசுகையில், இரு தரப்பினருக்கும் இடையே மக்கள் போக்குவரத்து இயக்கத்தை எளிதாக்கும் அத்தகைய ஒப்பந்தங்களை எளிதாக்குவதில் RAKTA குழுவின் முன்முயற்சி மற்றும் ஆதரவுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

முக்கிய பஸ் ஸ்டேஷன்கள் மற்றும் நிறுத்தங்கள்:

கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி, RAKTA வின் பொதுப் பேருந்துகள், ராஸ் அல் கைமாவில் உள்ள அல் தைத் தெற்கு (AlDhait South) பகுதியில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிலையத்திலிருந்து முசந்தம் கவர்னரேட்டிற்குச் சொந்தமான காசாபின் விலாயத்தில் (Wilayat of Khasab) முடிவடையும் பேருந்து வழியில் இயங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் ராஸ் அல் கைமாவில் உள்ள ராம்ஸ், ஷாம் ஆகிய இடங்களிலும், முசந்தம் கவர்னரேட்டில் ஹார்ஃப், கடா, புகாவின் விலாயத் மற்றும் திபாத் ஆகிய இடங்களிலும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளதாகவும் ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!