வளைகுடா செய்திகள்

‘தேஜ்’ புயலை சமாளிக்க தயாராகி வரும் ஓமான்!! சமூக ஊடகங்களில் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிவரும் ஆணையம்…

ஓமானின் குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (Civil Defence and Ambulance Authority) அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் உருவாகவிருக்கும் ‘தேஜ்’ புயலைச் சமாளிக்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலையால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்வதற்கு CDAA, தோஃபர் மற்றும் அல் வுஸ்தா கவர்னரேட்டுகளில் அதன் துறைகளை விழிப்புடன் நிறுத்தி வைத்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகும் புயல் வலுவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக கூடுதல் வீரர்களும் படையில் சேர்க்கப்பட்டு துறை வலுப்படுத்தப்பட்டுள்ளதாக CDAAயின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி உதவி இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் கர்னல் முகமது பின் ஹமூத் அல் மஹ்மூதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் படகுகள், ஜெட் ஸ்கிஸ், மற்றும் ஏராளமான உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றுடன் தோஃபர் கவர்னரேட்டில் 5 மேம்பட்ட பாயிண்ட்கள் மற்றும் அல் வுஸ்தா கவர்னரேட்டில் மூன்று பாயிண்ட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தேடுதல் மற்றும் மீட்புத் துறை மற்றும் அபாயகரமான பொருட்களைக் கையாளும் துறை ஆகிய இரண்டும் பாதுகாப்பு மற்றும் மீட்பு முயற்சிகளை ஒன்றிணைப்பதற்கு இரு துறைகளின் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து முன்னேற்றங்களை தொடர்ந்து பின்பற்றுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், வெள்ள அபாயங்கள் மற்றும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்க விழிப்புணர்வுத் திட்டம் இருப்பதாகவும், அவை அதிகாரசபையின் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஒளிபரப்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைவரும் கவனமாக இருக்கவும், தாழ்வான இடங்கள் மற்றும் சரிவுகளில் இருந்து விலகி இருக்கவும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் மற்றும் உத்தியோகபூர்வ அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகளை மற்றும் கேட்கவும் கர்னல் அல் மஹ்மூதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில், வானிலையை காரணமாக வைத்து தோஃபர் கவர்னரேட்டின் சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஏற்றும் கடைகளைக் கண்காணித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக களப்பணிக் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

எனவே, விதிமீறலில் ஈடுபடுவர்களைப் பற்றி புகாரளிக்க (80077997 – 80079009) என்ற கட்டணமில்லா எண்களில் கால் சென்டர்களைத் தொடர்பு கொள்ளுமாறு ஆணையம் அனைத்து நுகர்வோருக்கும் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துமாறு பொதுமக்களுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!