அமீரக செய்திகள்

துபாய்: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. நாளை மூடப்படவுள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள்.. RTA ட்வீட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்கிள் பந்தயமான “UAE வேர்ல்ட் டூர்” நாளை துபாயில் நடக்கவிருப்பதால் துபாயின் பெரும்பாலான சாலைகள் நாளை பிப்ரவரி 25, மதியம் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரை வெவ்வேறு நேரங்களில் தற்காலிகமாக மூடப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

RTA இது குறித்து இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “UAE வேர்ல்ட் டூர் பந்தயம் செல்லும் பாதைகளில் பிப்ரவரி 25, 2022 வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை போக்குவரத்து தாமதமாகும். உங்கள் இலக்கை எளிதில் அடைய மாற்று சாலைகளைப் பயன்படுத்தவும்” என்று தெரிவித்துள்ளது.

சைக்கிள் பந்தயம் செல்லும் பாதை

துபாயில் நாளை நடக்கவுள்ள UAE வேர்ல்ட் டூர் பந்தயம் எக்ஸ்போ 2020 துபாய் தளத்திலிருந்து தொடங்கி மீண்டும் எக்ஸ்போ தளத்தில் முடிவடையும். இந்த சைக்கிள் பந்தயம் துபாயின் முக்கிய சாலைகளான ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலை, அல் யலாயிஸ் சாலை, துபாய் உற்பத்தி நகருக்குள் நுழையும் ஷேக் முகமது பின் சயீத் சாலையின் ஒரு பகுதி, துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியை நோக்கி செல்லும் ஜூமைரா கோல்ஃப் கார்டன்ஸ் சாலை மற்றும் துபாய் மோட்டார் சிட்டி முழுவதும் உள்ள ஹெஸ்ஸா தெரு ஆகியவை வழியாக நடைபெறும்.

அதே போன்று அல் வர்கா, மிர்திஃப், ரஷிதியா மற்றும் ரஸ் அல் கோர் சாலை, மெய்தான் தெரு, ஜபீல் மற்றும் அல் வாஸ்ல் தெருக்களில் உள்ள சில சாலைகளும் இந்த சைக்கிள் பந்தயத்தால் பாதிக்கப்படும். பின்னர் துபாயின் மையப்பகுதியான டவுன்டவுன் பகுதி, பாம் ஜூமைரா, துபாய் மெரினா வழியாகவும் பந்தய வீரர்கள் பயணித்து இறுதி இலக்கான எக்ஸ்போ 2020 துபாய் ஸ்டேஜை அடைவார்கள் எனவும் RTA தெரிவித்துள்ளது.

சைக்கிள் பந்தயத்தால் நாளை எந்தெந்த சாலைகள் எந்த குறிப்பிட்ட நேரங்களில் பாதிக்கப்படும் என்பதையும், மாற்று சாலை விருப்பங்களைக் கண்டறிய வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையிலும் RTA ஒரு வீடியோ கிளிப்பையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!