தொழிலாளர்களுக்கான அமீரக அரசின் ‘End of service’ சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் என்ன.? அனைத்து விபரங்களும் உள்ளே…

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கான இறுதிச் சேவைப் பலன்களுக்கு மாற்றாக, புதிய இறுதிச் சேவை விருப்ப முதலீட்டு திட்டம் (end-of-service scheme) ஒன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அமீரகத்தில் இருக்கக்கூடிய பொதுத்துறை, தனியார் துறைகள் மற்றும் இலவச மண்டல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம், தங்கள் ஊழியர்களுக்கு பதிவு செய்ய விரும்பும் நிறுவனங்கள் அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) அல்லது செக்யூரிட்டிஸ் அண்ட் கமாடிட்டிஸ் அத்தாரிட்டி (SCA) ஆகியவற்றை அணுகி இந்த புதிய திட்டத்தில் சேரலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் சேருவது கட்டாயமில்லை என்றும், முதலாளிகள் மற்றும் பணியாளர்களின் விருப்பத்திற்குரியது என்றும் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய MoHRE அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் அவர்கள் கூறியுள்ளார். அதாவது, இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய முடிவு செய்தால், முதலாளிகளின் முதலீட்டு விருப்பங்களுக்கு ஏற்றவாறு முதலீடு செய்து சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான சந்தா வகைகள்:
புதிய திட்டத்தில் அடிப்படைச் சந்தா (Basic subscription) மற்றும் தன்னார்வச் சந்தா (Voluntary subscription) என இரண்டு வகையான சந்தா விருப்பங்கள் உள்ளன.
- அடிப்படை சந்தா: இது திறமையற்ற ஊழியர்களுக்கான (non-skilled workers) விருப்பமாகும். இதன் மூலம், மாதாந்திர பங்களிப்புகளானது குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு நிதிகளுக்குச் செல்லும்.
- தன்னார்வ சந்தா: இது முதலீடு பற்றி நன்கு அறிந்த திறமையான பணியாளர்களுக்கானது. அவர்கள் தங்கள் நிதிகளை அதிகம் முதல் நடுத்தரம் வரை ஆபத்துள்ள முதலீடுகளில் சேமிக்கலாம். இருப்பினும், திறமையான தொழிலாளர்கள் குறிப்பிட்ட சந்தா விருப்பத்தை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், அவர்கள் குறைந்த ஆபத்துள்ள உத்தரவாத முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.
சம்பளத்தில் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்?
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் எவ்வளவு காலம் பணியாற்றினார் என்பதைப் பொறுத்து புதிய திட்டத்திற்கான மாதாந்திர பங்களிப்புகள் இருக்கும்.
- நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 5.83% பிடித்தம் செய்யப்படும்.
- 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களின் அடிப்படை சம்பளத்தில் 8.33% பிடித்தம் செய்யப்படும்.
- பணியாளர்கள் தங்கள் மொத்த வருடாந்திர சம்பளத்தில் சுமார் 25 சதவீத பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் தங்கள் முதலீட்டு வருவாயை அதிகரிக்க விருப்பம் உள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரு பகுதியை அல்லது முழுத் தொகையையும் அல்லது அவர்களின் முதலீட்டு வருமானத்தையும் திரும்பப் பெற முடியும்.
பதிவு செய்வது எப்படி?
- MoHRE மற்றும் SCAஇன் வழிகாட்டுதலின் படி, புதிய இறுதிச் சேவை முதலீட்டுத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள முதலாளிகள் அமைச்சகத்தின் சர்வீஸ் சேனல்கள் மூலம், பதிவு செய்வதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் ஊழியர்களைத் தேர்வு செய்து சந்தாக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- அதே நேரத்தில் முந்தைய காலத்திலிருந்து தங்கள் ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- பதிவுசெய்த பிறகு, முதலாளி ஊழியரின் சம்பளத்திலிருந்து தன்னார்வ மாதாந்திர பங்களிப்பை மாற்றுவார். நிதியை ஒரே தொகையாக நேரடியாக திட்டத்திற்கு மாற்றலாம்.
ஊழியர்கள் எப்போது நன்மைகளைப் பெற முடியும்?
இத்திட்டத்தைப் பொறுத்தவரை வேலை ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு நிதிப் பலன்களைப் பெறுவதற்கும், திட்டம் முடிவடையும் வரை தொடர்ந்து முதலீடு செய்வதற்கும் ஊழியர்களுக்கு விருப்பம் உள்ளது. புதிய முதலாளி முந்தைய நிறுவனத்தில் இருந்து ஊழியரின் சந்தாவிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளலாம் மற்றும் ஒப்பந்தத்திற்குப் பிறகு, அதே நிதிக்கு சந்தா செலுத்துவதையும் தொடரலாம்.
புதிய திட்டத்தில் சேருவதற்கு முன்பு தொழிலாளர்கள் பெற்ற கிராஜுட்டி தொகையை அவர்கள் வைத்திருப்பார்கள், இருப்பினும், புதிய திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களுக்கு தற்போதுள்ள எண்ட்-ஆஃப்-சர்வீஸ் கிராஜுட்டி முறை நிறுத்தப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் மாதாந்திர பங்களிப்பைச் செலுத்த வேண்டும் மற்றும் ஊழியர்களின் சேவையின் முடிவில் தாங்கள் கட்டிய சேமிப்புத் தொகையையும், முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel