UAE: அபுதாபிக்குள் நுழைய இன்று முதல் குறிப்பிட்ட சில வாகனங்களுக்குத் தடை!! ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வெளியிட்ட அறிவிப்பு….
அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) லாரிகள் மற்றும் பேருந்துகள் போன்ற சில கனரக வாகனங்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டவும், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் ITC கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 1, 2023 வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 4, 2023 திங்கள் வரையிலான நாட்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் இந்த வாகனங்கள் அபுதாபிக்குள் செல்ல அனுமதி கிடையாது.
குறிப்பாக, ஷேக் சையத் ப்ரிட்ஜ், ஷேக் கலீஃபா ப்ரிட்ஜ், முசாபா ப்ரிட்ஜ், அல் மக்தா ப்ரிட்ஜ் உள்ளிட்ட நுழைவாயில்களில் டிசம்பர் 1 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை சில கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பொது சுகாதார நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக் ஆதரவு சேவைகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தற்காலிக கட்டுப்பாடுகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் யூனியன் தின விடுமுறை கொண்டாட்டத்துடன் ஒத்துப்போகின்றன. அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் டிசம்பர் 2 முதல் 4 வரை நீட்டிக்கப்பட்ட வார விடுமுறையை அனுபவிப்பார்கள்.
அத்துடன், பிரபலமான ஷேக் சையத் ஃபெஸ்டிவல் நாட்டின் 52 வது தேசிய தினத்தை முன்னிட்டு, யூனியன் அணிவகுப்பு, வானவேடிக்கை காட்சிகள், பிரம்மிப்பூட்டும் ட்ரோன் நிகழ்ச்சிகள் மற்றும் எமிரேட்ஸ் நீரூற்று நிகழ்ச்சிகள் என பிரமாண்டமான நிகழ்ச்சிகளின் அற்புதமான பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி முக்கிய சாலைகளை 4,800 ஒளி விளக்குகளால் அலங்கரித்துள்ளது. அபுதாபி கார்னிச் ஸ்ட்ரீட் மற்றும் அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட், ஷேக் சயீத் ஸ்ட்ரீட் மற்றும் ஏர்போர்ட் ஸ்ட்ரீட் உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய இடங்களை பல்வேறு லைட் செட்டிங்கால் தினமும் இரவு ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel