குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல் சபா மரணம்.. எமீரி நீதிமன்றம் அறிவிப்பு..!!
குவைத் நாட்டின் மன்னர் எமீர் ஷேக் நவாப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானதாக குவைத்தின் எமீரி நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. அவருக்கு தற்போதைய வயது 86 ஆகும்.
ஷேக் நவாப் அல் சபா அவர்கள் கடந்த நவம்பர் மாதம் ‘அவசர உடல்நலப் பிரச்சனை’ காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவரின் இழப்பை தொடர்ந்து குவைத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 40 நாட்களுக்கு உத்தியோகபூர்வ துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், உத்தியோகபூர்வ துறைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் நவாஃப் கடந்த 2020 ஆம் ஆண்டு ஷேக் சபா அல் அகமது அல் சபாவின் மரணத்தைத் தொடர்ந்து குவைத்தின் எமீராக பதவியேற்றார். 1937 இல் பிறந்த ஷேக் நவாஃப், 1921 முதல் 1950 வரை குவைத்தின் மறைந்த ஆட்சியாளரான ஷேக் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் ஐந்தாவது மகனாவார்.
அவர் தனது 25 வயதில் ஹவாலி மாகாணத்தின் ஆளுநராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் உள்துறை அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றி இருந்திருக்கிறார். தற்போது வரை மூன்று வருடங்களாக குவைத்தின் எமீராக இவர் பதவியில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் மறைவைத் தொடர்ந்து மற்ற வளைகுடா தலைவர்களும் உலக தலைவர்களும் மக்களும் தங்களின் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.