அமீரக செய்திகள்

உலகளவில் அதிகம் பேர் பார்வையிட்ட இடமாக மாறிய துபாய் மால்!! ஒரே ஆண்டில் 105 மில்லியன் பேரை வரவேற்று சாதனை….

உலகளவில் சுற்றுலா, ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளிலும் மற்ற நகரங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி துபாய் முன்னணி வகித்து வருகிறது. குறிப்பாக, துபாயின் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச நாடுகளில் இருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

அந்தவகையில், உலகின் இரண்டாவது பெரிய வணிக வளாகமான துபாய் மால், கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 105 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்று முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை முறியடித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையின் மூலம் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாகவும் உருவெடுத்துள்ளது.

செவ்வாயன்று மால் நிர்வாகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களில், நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 20 மில்லியன் மக்கள் மாலுக்கு வருகை தந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, 2023 ஐத் தொடர்ந்து 2024-ம் ஆண்டும் துபாய் மாலுக்கு மற்றொரு சாதனை ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்கள் துபாய் மாலின் கவர்ச்சியான நிலை மற்றும் துபாயின் முன்னோக்கு சிந்தனை கொண்ட தலைமை மற்றும் வலுவான பொருளாதாரத்தை பிரதிபலிப்பதாக துபாய் மாலுக்கு சொந்தமான Emaar நிறுவனத்தின் நிறுவனர் முகமது அலப்பர் (Mohamed Alabbar) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “இந்த எண்ணிக்கையானது மாலின் உலகளாவிய அழகை அடிக்கோடிட்டுக் காட்டியது மட்டுமல்லாமல், துபாயின் காஸ்மோபாலிட்டன் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாலின் நடைபெற்ற நிகழ்வுகள், அத்தியாவசிய பண்டிகை சந்தர்ப்பங்கள், சர்வதேச கொண்டாட்டங்கள் மற்றும் ப்ரோமோஷன்களே அதன் சாதனை எண்ணிக்கைக்கு முக்கிய ஊக்கியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல், துபாய் ஃபுட் ஃபெஸ்டிவல் மற்றும் 3 நாள் சூப்பர் சேல் போன்ற முக்கிய நிகழ்வுகளும் மாலின் பெரும் கூட்டத்தை ஈர்க்கும் மற்றும் ஈடுபடுத்தும் திறனை மேலும் வெளிப்படுத்தியுள்ளன.

அதுமட்டுமில்லாமல், மாலின் இன்ஸ்டாகிராம் கணக்கை தற்போது 1.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்வதால், அதன் டிஜிட்டல் தடமும் கணிசமாக விரிவடைந்துள்ளது. மேலும், மாலின் வாடிக்கையாளர் திருப்தி சராசரியாக 4.6 ஆக இருந்தது, இது ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நேர்மறையான கருத்துக்களை பிரதிபலிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் துபாய் மாலில் இருக்கக்கூடிய அகுவாரியம் மற்றும் அண்டர்வாட்டர் ஜூ (aquarium and underwater zoo), ஐஸ் ஸ்கேடிங் (ice skating) ஆகியவை துபாய் மாலை மற்ற எல்லா மால்களில் இருந்தும் வேறுபடுத்திக்காட்டக்கூடிய முக்கிய பகுதிகளாகும்.

முதன்முதலாக 2008 இல் தொடங்கப்பட்ட துபாய் மால், தற்பொழுது 1,200 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இங்குள்ள வாட்டர் ஃபவுண்டைன் (water fountain) உலகளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வைக் காண வாட்டர் ஃபவுண்டைன் பகுதிக்கு வருவது வழக்கமாகும். துபாய்க்கு சுற்றுலா வரும் எவரும் இந்த நிகழ்வை காணாமல் நாடு திரும்பாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!