உலக செய்திகள்

நடுவானில் திடீரென சரிந்த விமானம்.. மேற்கூறையில் அடிபட்டு 50 பேர் காயம்.. அலறிய பயணிகள்..!!

தென் அமெரிக்க விமான நிறுவனமான LATAM ஏர்லைன்ஸால் இயக்கப்படும் போயிங் 787 நேற்று (மார்ச் 11) திங்களன்று ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்திற்கு பறந்த போது, திடீரென நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு பயங்கரமாக குலுங்கி திடீரென கீழ் நோக்கி சரிந்ததாகவும், இதன் விளைவாக விமானத்தில் இருந்த 50 பேர் காயமடைந்ததாகவும் நியூசிலாந்து சுகாதார சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை மதியம் திட்டமிட்டபடி 263 பயணிகள் மற்றும் 9 கேபின் பணியாளர்களுடன் ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து 10 பயணிகள் மற்றும் மூன்று கேபின் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய பிரையன் ஜோகட் என்ற பயணி, விமானம் திடீரென குலுங்கியதால், பயணிகள் பலரும் இருக்கைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டு, விமானத்தின் கூரையின் மேல் மோதி, இருக்கைகளுக்கு இடையில் உள்ள வழியில் விழுந்ததாக விவரித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், மக்கள் தூக்கி எறியப்பட்டதில் சில கூரை பேனல்கள் உடைந்ததாகவும், பலரது தலையில் இருந்து இரத்தம் வந்ததாகவும் ஜோகட் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விமானத்தில் பயணித்தவர்களில் மருத்துவர்களாக இருந்த பயணிகள் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு பேண்டேஜ் மற்றும் கழுத்து பிரேஸ்களை வழங்கி முதலுதவி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, நடுவானில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணத்தை ஆராய்வதாக LATAM ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், நியூசிலாந்தின் போக்குவரத்து விபத்து விசாரணை ஆணையம் (TAIC) இன்று செவ்வாய்கிழமை விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் விமான தரவு பதிவு கருவியை கைப்பற்றியதாகவும் ஏர்லைன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறக்கும் போது அழுத்தம் காரணமாக சில நேரங்களில் லேசாக குலுங்கும் என்பதை விமானத்தில் பயணித்த அனைவருமே அனுபவித்திருப்போம். எனினும் சில சமயங்களில் அதிகப்படியான அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, திடீரென சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற எச்சரிக்கை ஒலிக்கும். எனினும் நம்மில் பலர் அதனை பெரிதாக கண்டுகொள்வது இல்லை, அது சில சமயங்களில் ஆபத்திற்கு விளைவிக்கும் என்பதை நம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!