வளைகுடா செய்திகள்

ஓமான்: நாளை முதல் நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம்..!! அமைச்சகம் அறிவிப்பு..!!

ஓமான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த பொது பேருந்து சேவைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) முதல் மீண்டும் தொடங்கும் என ஓமானின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பல மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கப்படவிருக்கும் பொது பேருந்து சேவைகளில் முதல் கட்டமாக நகரங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நாளை செப்டம்பர் 27 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மஸ்கட் நகரிற்கு உள்ளே இயங்கக்கூடிய பேருந்து சேவைகள் அக்டோபர் 4 முதல் துவங்கும் என்றும், அதே போன்று சலாலா நகரிற்குள்ளே இயங்கக்கூடிய பேருந்துகள் அக்டோபர் 18 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுஹர் நகரிற்குள் இயங்கக்கூடிய பேருந்து சேவைகள் துவங்கும் தேதி பின்னர் அதிகாரிகளால் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில் சில மாற்றங்களையும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, நகரத்திற்குள்ளே இயங்கக்கூடிய பேருந்து சேவைகளின் டிக்கெட் கட்டணங்களுக்கு கூடுதலாக 100 பைசாவையும், அதேபோன்று நகரம் விட்டு நகரம் செல்லும் பேருந்து சேவைகளின் டிக்கெட் கட்டணங்களுக்கு கூடுதலாக 500 பைசாவையும், பேருந்து சுத்திகரிப்பு மற்றும் துப்புரவு பணிகளுக்காக விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொது போக்குவரத்து மீண்டும் தொடங்குவதை தொடர்ந்து ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பும் பயணம் முடிந்த பின்பும் சுத்திகரிப்பு செய்வது, நகரங்களுக்கிடையேயான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் வெப்பநிலையை அளவிடுவது, பயணிகள் எப்போதும் முகக்கவசம் அணிந்திருப்பது மற்றும் பேருந்துகளில் சானிடைசேஷன் கருவிகள் வழங்குவது உள்ளிட்டவை தொடர்ந்து பேணப்படும் எனவும் அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) மற்றும் கருவிகளும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!