அமீரக செய்திகள்

UAE: வாகன ஓட்டிகள் திடீரென பாதை மாற்றி ஓட்டியதால் நிகழ்ந்த 317 சாலை விபத்துகள்..!!

அபுதாபியில் கடந்த ஆண்டில் மட்டும் சாலைகளில் வாகன ஓட்டுனர்கள் திடீரென பாதைகளை மாற்றி (sudden change of lanes) ஓட்டியதன் காரணமாக 317 விபத்துக்கள் நிகழ்ந்ததாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் இந்த ஆபத்தான விதிமீறலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வாகன ஓட்டிகள் திடீரென சாலையில் தங்களின் பாதையை விட்டு வேறு பாதைக்கு மாறுவது கடுமையான போக்குவரத்து மீறல் என்றும், இந்த மீறலானது பயங்கர போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“ஓட்டுநர்கள் சாலையில் கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும்போது அவர்கள் மொபைல் போன்கள் பயன்படுத்தக்கூடாது. பாதைகளை மாற்றும்போது பக்க கண்ணாடிகள் (side mirrors) மற்றும் இண்டிகேட்டர்களைப் (indicators) பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டும் போது தொலைபேசிகளில் அரட்டை அடிப்பது, குறுஞ்செய்தி அனுப்புவது அல்லது பேசுவது போன்றவற்றில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் சாலைகளில் கவனம் செலுத்தத் தவறுகிறார்கள். இது திடீரென பாதைகளை மாற்ற வழிவகுக்கும். இதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடும்” என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அபுதாபி போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் (Abu Dhabi Traffic and Patrols Directorate), கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 20 வரை, 4,311 வாகன ஓட்டிகள் சாலையில் திடீரெனவும், இண்டிகேட்டர்களைப் பயன்படுத்தாமலும், பாதையை மாற்றி விதிமீறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் 2018 ஆம் ஆண்டில், பாதைகளை மாற்றும்போது இண்டிகேட்டர்களைப் பயன்படுத்தாத ஓட்டுநர்களுக்கு எதிராக 17,349 மீறல்களை காவல்துறையினர் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!