அமீரக செய்திகள்

கடந்த இரு நாட்களில் மட்டும் 1,244 விமானங்களை ரத்து செய்த துபாய் ஏர்போர்ட்..!! இன்று குறிப்பிட்ட விமான சேவைகள் மீண்டும் இயக்கம்..!!

அமீரகத்தில் வரலாறு காணாத மழை பெய்ததைத் தொடர்ந்து, பல எமிரேட்களில் உள்ள விமான நிலையச் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டது மட்டுமின்றி, விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. நாட்டில் விமானப் போக்குவரத்து கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.

குறிப்பாக துபாயில் இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் (DXB) இரண்டு நாட்களில் மொத்தம் 1,244 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 41 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும் துபாய் ஏர்போர்ட்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தீவிர மழைக்குப் பிறகு, விமான நிலையத்தின் ஓடுதளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதால், அதன் செயல்பாடுகள் தடை பட்டது. இருப்பினும், விமான நிலையம் டெர்மினல் 1-ல் இருந்து பகுதியளவு செயல்பாடுகளை மீண்டும் விமான நிலையம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது டெர்மினல் 3-ல் இருந்தும் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து DXBயின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், வானிலை நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கவும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இயல்பான செயல்பாடுகளுக்குத் திரும்பவும் மூலோபாய பங்காளிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே, செவ்வாயன்று துபாய் ஏர்போர்ட்ஸ், விமான நிலையத்தில் மறு முன்பதிவு வசதிகள் இல்லாததால் பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவது குறித்து தங்கள் விமான நிறுவனத்திடம் இருந்து உறுதிப்படுத்தல் பெறாதவரை, டெர்மினல் 1க்கு அவசியமின்றி வரவேண்டாம் என்று ஒரு அறிக்கையில் அறிவுறுத்தியிருந்தது.

மேலும், கூட்ட நெரிசல் காரணமாக, உறுதிப்படுத்தப்பட்ட புறப்பாடுகளைக் கொண்ட பயணிகளுக்கு மட்டுமே இப்போது டெர்மினல் 1க்கான அணுகல்  கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விமான சேவைகள் தொடக்கம்:

அமீரகம் முழுவதையும் புரட்டிப்போட்ட பாதகமான வானிலையைத் தொடர்ந்து, விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதங்கள் நீடித்து வந்தாலும், இன்று வியாழக்கிழமை முதல், DXBயின் டெர்மினல் 1 லிருந்து இயங்கும் சர்வதேச விமானங்களின் உள்வரும் விமானங்களை துபாய் ஏர்போர்ட்ஸ் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆகவே, துபாயில் இருந்து புறப்படும் பயணிகள் உறுதியான விமான முன்பதிவு இருந்தால் மட்டுமே டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3-ற்கி வர வேண்டும் என்று துபாய் ஏர்போர்ட்ஸ் வலியுறுத்தியுள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனமும் ஃப்ளைதுபாய் விமான நிறுவனமும் துபாயில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு உறுதியான விமான முன்பதிவு இருந்தால் மட்டுமே விமான நிலையத்தின் டெர்மினல் 3-ற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இவை தவிர, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் வெள்ளத்தில் மூழ்கிய ஓடுபாதையில் நிலைமை சீராகும் வரை விமானங்களை தற்காலிகமாக ரத்து வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!