அமீரக செய்திகள்

UAE: விமான சேவையை மீண்டும் தொடங்கிய எமிரேட்ஸ், ஏர் அரேபியா மற்றும் ஃபிளைதுபாய்.. ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை பெறுவது எப்படி..!!

அமீரகத்தில் பெய்த கனமழை காரணமாக விமான நிலையத்தின் ஓடுபாதை முழுவதும் மழைநீர் தேங்கியதால், துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்கள் அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக அமீரகத்திலிருந்து இயங்கும் எமிரேட்ஸ், ஏர் அரேபியா மற்றும் ஃபிளைதுபாய் ஆகிய விமான நிறுவனங்களும் தங்களின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் விமான நிலையத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதால், எமிரேட்ஸ், ஏர் அரேபியா மற்றும் ஃபிளைதுபாய் ஆகியவற்றின் விமான சேவைகள் தற்போது அமீரகத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களின் விமான பயணத்திற்கு தற்போது செக்-இன் செய்யலாம் என்றும் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், துபாயில் இருந்து புறப்படும் வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் விமானங்களுக்கு செக்-இன் செய்யலாம் என்று கூறியுள்ளது. இருப்பினும், விமான நிலைய செயல்பாட்டில் உள்ள சவால்கள் காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதங்கள் இருக்கலாம் என்றும் எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், விமானம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் முன்பதிவு முகவர் அல்லது எமிரேட்ஸ் தொடர்பு மையத்தைத் தொடர்புகொண்டு மறுபதிவு செய்து கொள்ளலாம் எனவும் எமிரேட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன், விமான நிலையத்தில் நெரிசலைக் குறைக்க உறுதிப்படுத்தப்பட்ட விமான முன்பதிவு இருந்தால் மட்டுமே விமான நிலையத்திற்கு வருமாறும் பயணிகளுக்கு எமிரேட்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

ஏர் அரேபியா

ஷார்ஜாவை தளமாக கொண்டு இயங்கும் ஏர் அரேபியா விமான நிறுவனம் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், நேற்று அதிகாலை முதல் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திட்டமிடப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதாக அறிவித்துள்ளது.

மேலும், ரத்து செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள் செலுத்திய தொகைக்கான முழு கிரெடிட் வவுச்சரைப் பெறுவார்கள் என்றும், இந்த கிரெடிட் வவுச்சரை எதிர்கால விமான முன்பதிவுகளுக்கு பயணிகள் பயன்படுத்தலாம் என்றும் ஏர் அரேபியா அறிவித்துள்ளது. மாற்றாக, பயணிகளுக்கு முழுப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம் உள்ளதாகவும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பயண முகவர்கள் மூலம் முதலில் முன்பதிவு செய்த பயணிகள், மீண்டும் முன்பதிவு விருப்பங்கள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளுக்கு அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஏர் அரேபியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபிளைதுபாய்

துபாயை தளமாக கொண்ட பட்ஜெட் கேரியரான ஃபிளைதுபாய் விமான நிறுவனமும் DXB இன் டெர்மினல் 2 மற்றும் டெர்மினல் 3 ஆகிய இரண்டிலிருந்தும் தங்களின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. எனினும், விமான அட்டவணையில் சில கால தாமதங்கள் ஏற்படலாம் எனவும் ஃபிளைதுபாய் குறிப்பிட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், பயணிகளை அதன் இணையதளத்தில் தங்கள் விமான நிலையைப் பார்க்கவும், ஆன்லைனில் செக்-இன் செய்யவும் ஃபிளைதுபாய் அறிவுறுத்தியுள்ளது. கூடவே, பயணிகள் தங்கள் பயணத்தை கவனமாக திட்டமிடவும், விமான நிலையம் வர கூடுதல் நேரத்தை ஒதுக்கவும் விமான நிறுவனம் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், முன்பதிவு ரத்து செய்யப்பட்ட பயணிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும் என்று கூறியதுடன், பயண முகவர் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது மறு முன்பதிவு செய்வதற்கான விருப்பங்களுக்கு அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் ஃபிளைதுபாய் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!