துபாய்: ஈதை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு கார், விமான டிக்கெட், ஃபோன், தங்க நாணயங்களை வழங்கும் GDRFA..!!
இந்த வருட ஈத் அல் ஃபித்ரை துபாயில் உள்ள தொழிலாளர்களுடன் கொண்டாடும் விதமாக அதிகாரிகள் சிறப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர். துபாயில் உள்ள ப்ளூ காலர் தொழிலாளர்களின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ‘We celebrate Eid together’ என்ற கருப்பொருளின் கீழ், ஜெபல் அலி, அல் கூஸ் மற்றும் முஹைஸ்னா ஆகிய மூன்று இடங்களில் ஈத் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தால் (GDRFA) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக, விமான டிக்கெட்டுகள், மூன்று புதிய செடான் கார்கள், 150 ஸ்மார்ட்போன்கள், 300 தங்க நாணயங்கள் மற்றும் தள்ளுபடி கார்டுகள் (discount cards) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் பட்டத்து இளவரசரும், துபாயின் நிர்வாகக் குழுவின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறவுள்ள இந்த விழாவனது, ஏப்ரல் 7 முதல் 12 வரை மாலை 4 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இது எமிரேட்டில் உள்ள தொழிலாளர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட நான்கு வருடாந்திர கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கொண்டாட்டங்கள் ஈத் அல் ஃபித்ர், ஈத் அல் அதா, சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் புத்தாண்டு ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து GDRFA-துபாயின் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மரி அவர்கள் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், அதிகாரிகள் தொழிலாளர்களுடன் ஈத் கொண்டாட விரும்புவதாகவும், அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் தொழிலாளர்களின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் தொழிலாளர்களின் பங்கு காரணமாக அவர்கள் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, இந்த கொண்டாட்டத்தில் மதிப்புமிக்க பரிசுகளுடன் இசை, கலை மற்றும் போட்டிகள் நடைபெறும் என்பதும், கிரிக்கெட், பூப்பந்து, கைப்பந்து, கால்பந்து மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஈத் உணர்வோடு, பழங்கால சந்தைகளை உருவகப்படுத்தும், உணவு, உள்ளூர் கைவினைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தொழிலாளர் பொருட்களைக் காட்சிப்படுத்தும் தொழிலாளர் சந்தையும் இந்த கொண்டாட்டத்தில் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel