அமீரக சட்டங்கள்

UAE: திடீரென வேலையை ராஜினாமா செய்தால் முதலாளிக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா?? தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வேலையை விட்டு வெளியேறினால், அவரது முதலாளி சில மாதங்களுக்கான சம்பளத்தை அவரிடம் கேட்கலாமா? இது சட்டப்பூர்வமானதா? இதில் சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்றால், அமீரக சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சட்டம் – 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 33 இல், ஒரு ஊழியர் வேலையை ராஜினாமா செய்யும் நேரத்தில் எந்த சூழலில் தனது முதலாளிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது குறித்த விபரங்களை இங்கே ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1. உங்கள் நோட்டீஸ் பீரியடை (notice period) நீங்கள் வழங்காதபோது

ஒரு ஊழியர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் ராஜினாமா செய்வதற்கு முன்பு தேவையான அறிவிப்பு காலத்தை (notice period) வழங்கத் தவறினால், முதலாளி ஊழியரிடம் இழப்பீட்டுத் தொகையைக் கோரலாம். எனவே, ஒப்பந்தத்தின்படி இந்த நோட்டீஸ் பீரியட் விதியை நிறைவேற்றத் தவறினால், அத்தகைய ஊழியர், முதலாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், ‘நோட்டீஸ்க்குப் பதிலாக பணம் செலுத்துதல் (payment in lieu of notice)’ என்ற பெயரில் முதலாளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், இழப்பீடு என்பது முழு அறிவிப்பு காலம் (notice period) அல்லது அதன் மீதமுள்ள காலத்திற்கான தொழிலாளியின் ஊதியத்திற்கு சமமாக இருக்கும். எனவே, ஊழியர் வேலையை விட்டு வெளியேறுவதற்கு முன் தேவையான அறிவிப்பை வழங்கத் தவறினால், ‘notice period allowance’ என்று குறிப்பிடப்படும் இழப்பீட்டுப் பணத்தை செலுத்துமாறு முதலாளி கேட்கலாம்.

ஒருவேளை, இதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் முதலாளி உங்கள் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்திய பிறகு, நீதிமன்றத்தின் மூலம் கூட இதைச் செலுத்தும்படி ஊழியரிடம் கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தகுதிகாண் காலத்தில் (probation period) வேலையை விட்டு வெளியேறினால்

ப்ரொபேஷன் பீரியட் என்று சொல்லக்கூடிய ஊழியர் வேலை சேர்ந்த புதிதில் குறிப்பிடத்தக்க காலம் பணியில் இருக்கும் போது அந்த சமயத்தில் ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறினால், அவரது வேலை ஒப்பந்தத்தில்  ஆட்சேர்ப்பு அல்லது ஒப்பந்தச் செலவுகளை ஊழியர் ஏற்க வேண்டும் என்ற விதிகள் இருக்கும் பட்சத்தில், அவர் முதலாளிக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும் சட்ட ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த ஊழியர் வேறு வேலையில் சேரும் பட்சத்தில் தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 9இல், “ஒரு ஊழியர் தகுதிகாண் காலத்தின் போது ராஜினாமா செய்தால், புதிய முதலாளி அசல் முதலாளிக்கு ஆட்சேர்ப்பு அல்லது ஒப்பந்த செலவுகளை ஈடுசெய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இல்லையெனில், தகுதிகாண் காலத்தின் போது பணியை ராஜினாமா செய்தால், பணியமர்த்துதல் அல்லது ஒப்பந்தம் செய்வதற்கான செலவுகளை பணியாளர் ஏற்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டால், அத்தகைய இழப்பீட்டை பணியாளரிடம் இருந்து முதலாளி கேட்கலாம் என்று சட்ட ஆலோசகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எத்தகைய சூழலில் உங்கள் முதலாளிக்கு நீங்கள் இழப்பீடு செலுத்த வேண்டியதில்லை?

நீங்கள் உங்கள் தகுதிகாண் காலத்தை (probation period) முடித்துவிட்டு, முறையாக உங்கள் அறிவிப்புக் காலத்தை (notice period) வழங்கினால், இழப்பீடு செலுத்துமாறு உங்கள் முதலாளி உங்களிடம் கேட்க முடியாது. மேலும், நீங்கள் உடனடியாக ராஜினாமா செய்யக்கூடிய சில சந்தர்ப்பங்கள் இருக்கலாம், அத்தகைய சூழலில் உங்கள் முதலாளிக்கு நீங்கள் இழப்பீடு வழங்க வேண்டியது இல்லை.

சட்டப்பிரிவு 45 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சில காரணங்களால் ஊழியர் உடனடி அறிவிப்புடன் வேலையை ராஜினாமா செய்யலாம் என கூறுகின்றது. அதாவது, முதலாளியின் கடமைகளை மீறுதல், பணியின் போது முதலாளி அல்லது அவரது பிரதிநிதிகளால் பணியாளர் மீது தாக்குதல் அல்லது துன்புறுத்தல் அல்லது வன்முறை, பணியிடத்தில் பணியாளரின் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் வகையிலான வேலை போன்றவற்றால் ராஜினாமா செய்ய முடியும்.

அதுமட்டுமல்லாமல், ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட வேலையை வழங்குதல் போன்ற சூழ்நிலைகளிலும் ஊழியர் உடனடியாக வேலையை ராஜினாமா செய்து ஒப்பந்தத்தை நிறுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இத்தகைய சந்தர்ப்பங்களில் அறிவிப்பு காலத்தை வழங்கத் தவறியதற்காக ஊழியர் எந்த இழப்பீடும் வழங்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!