ADVERTISEMENT

அமீரகத்தில் மாத சம்பளத்திற்கு பதில் இனி நீங்கள் தினசரி அல்லது வார சம்பளம் பெறலாம் என்பது தெரியுமா உங்களுக்கு..?

Published: 13 Feb 2022, 8:42 PM |
Updated: 13 Feb 2022, 8:48 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 2, 2022 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, அமீரகத்தில் பணிபுரியக் கூடிய தொழிலாளர்கள் தங்களின் மாத சம்பளத்தை இனி தினசரி சம்பளமாகவோ அலலது வார சம்பளமாகவோ அலலது மணிநேரத்தின் அடிப்படையில் சம்பளமாகவோ பெற முடியும். இது பற்றி புதிய தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன..? நிபந்தனைகள் அல்லது விதிமுறைகள் ஏதேனும் உண்டா..? என்பது பற்றிய கூடுதல் விபரங்களை நாம் இங்கே தெளிவாக காண்போம்.

ADVERTISEMENT

அமீரகத்தின் தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் விதமாக, தனியார் துறை முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையேயான வேலை ஒப்பந்தம் தொடர்பான விதிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்ட புதிய தொழிலாளர் சட்டம் அமீரக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்று வருட வேலை ஒப்பந்தத்திலிருந்து நெகிழ்வான வேலை மாதிரிகள் வரை பல்வேறு மாற்றங்கள் இந்த புதிய சட்டம் மூலம் நடைமுறைக்கும் வந்துள்ளது.

அதில் ஒன்றாக, புதிய தொழிலாளர் சட்டமான தொழிலாளர் உறவுகளின் ஒழுங்குமுறைகள் 2021 இன் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 33 ன் ஆர்டிகிள் என் 22, 23 மற்றும் 24 இல் முதலாளிகளும் தொழிலாளர்களும் தேர்ந்தெடுக்கக்கூடிய நெகிழ்வான சம்பள விருப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வேலை ஒப்பந்தத்தை பொறுத்து ஒரு தொழிலாளி தனது சம்பளத்தை அமீரகத்தின் திர்ஹம்சாகவோ அல்லது வேறு நாட்டு நாணயத்திலோ (எடுத்துக்காட்டாக இந்திய ரூபாயில்) பெறலாம்.

ADVERTISEMENT

புதிய தொழிலாளர் சட்டத்தின் ஆர்டிகிள் 22 ஆனது, ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அளவு அல்லது வகையை தெளிவாகக் குறிப்பிட வேண்டியதன் அவசியத்தையும், ஆர்டிகிள் 23 ஆனது மாத சம்பளத்திற்கு பதிலாக வழங்கப்படும் தினசரி அல்லது வார சம்பளம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பதையும், ஆர்டிகிள் 24 ஆனது நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மாதாந்திர சம்பளத்திற்கான கட்டண அமைப்பிலிருந்து வேறு சம்பளத் திட்டத்திற்கு மாறுவதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது.

ஆர்டிகிள் (22) – ஊதியத்தின் அளவு அல்லது வகையை நிர்ணயித்தல் மற்றும் அதை செலுத்துதல்

1. ஊதியத்தின் அளவு அல்லது வகை (amount or type of wage) வேலை ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்படும். அத்தகைய தொகை அல்லது வகை வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்படவில்லை என்றால் அது தொழிலாளர் விதிமீறலாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும்.

ADVERTISEMENT

2. தொழிலாளர் அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முதலாளி தனது தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊதியத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.

3. தொழிலாளர்களுக்கான ஊதியம் அமீரகத்தின் திர்ஹம்ஸில் வழங்கப்படும். வேலை ஒப்பந்தத்தில் முதலாளி மற்றும் தொழிலாளி ஒப்புக்கொண்டால் தொழிலாளரின் ஊதியம் மற்றொரு நாணயத்தில் செலுத்தப்படலாம்.

ஆர்டிகிள் (23) – பகுதி பகுதியாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை கணக்கிடும் முறை

முழு ஊதியமாக இல்லாமல் பகுதி பகுதியாக ஊதியம் பெறும் தொழிலாளர்களின் தினசரி சம்பளமானது, ஊதிய மாற்றம் தொடர்பான கோரிக்கை அல்லது நடவடிக்கைக்கு முந்தைய ஆறு மாதங்களுக்குள் அவர் வேலை செய்த நாட்களுக்கு பெற்ற சராசரி ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

ஆர்டிகிள் (24) – தொழிலாளரை மாதாந்திர ஊதிய பிரிவில் இருந்து மற்றொரு ஊதிய பிரிவிற்கு மாற்றுதல்

தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டால் மற்றும் மாதாந்திர அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட காலப்பகுதியில் அவர்களுக்கு கிடைத்த உரிமைகளுக்கு பாரபட்சம் இல்லாமல், மாதாந்திர ஊதிய வகையிலிருந்து தினசரி, வாராந்திர, மணிநேரம் அல்லது துண்டு துண்டாக ஊதியம் பெறும் வகைக்கு மாற்றப்படலாம்.