வளைகுடா செய்திகள்

கடந்த ஒரு மாத்தில் மட்டும் ஓமானை விட்டு வெளியேறிய 45,000 வெளிநாட்டவர்கள்..!! தேசிய புள்ளி விபரத்தில் தகவல்..!!

ஓமானில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை நாட்டின் மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் தற்பொழுது குறைவாகக் குறைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் பெரிய வீழ்ச்சி என்று அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமான் நாட்டில் இருக்கக்கூடிய தேசிய புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் மையத்தின் (National Centre for Statistics and Information) தரவுகளின் அடிப்படையில், ஜூலை 27, 2020 நிலவரப்படி, ஓமானில் உள்ள மொத்த மக்கள் தொகையான 4,536,938 இல் 39.9 சதவீதம் மட்டுமே வெளிநாட்டினர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓமான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.725 மில்லியன் ஓமான் நாட்டு குடிமக்களும் 1.81 மில்லியன் வெளிநாட்டினரும் வசிப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கடந்த ஏப்ரல் 26, 2017 அன்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவீதம் வெளிநாட்டினர் வசித்ததாகவும் அதுவே அந்நாட்டில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகையில் அதிகளவு வெளிநாட்டினர் இருந்த வருடம் என்றும் கூறப்படுகின்றது.

அந்த கணக்கெடுப்பில், நாட்டின் மொத்த மக்கள் தொகையான 4.6 மில்லியன் மக்களில் 2.1 மில்லியன் வெளிநாட்டவர்களும் 2.49 மில்லியன் ஓமானியர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

NCSI தரவுகளின் அடிப்படையில் கடந்த மாதத்தில் மட்டும் 45,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஓமானை விட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் வெளிநாட்டவரின் மக்கள் தொகை
1,858,516 ஆகவும், ஜூலை 27 அன்று இது 1,811,619 ஆகவும் குறைந்துள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் 46,897 வெளிநாட்டினர் ஓமானை விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னதாக, மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் மட்டுமே 37,000 வெளிநாட்டினர் நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சரிவு, கச்சா எண்ணெய் வீழ்ச்சி, வேலை இழப்பு மற்றும் ஓமான் அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டினருக்கு பதிலாக ஓமான் குடிமக்களை பணியமர்த்துதல் போன்ற நடவடிக்கைகளே வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!