அமீரக செய்திகள்

50 மில்லியன் திர்ஹம்ஸிற்கு விற்கப்பட்ட நம்பர் பிளேட்..!! துபாயில் RTA நடத்திய ஏலத்தில் விற்பனை…

துபாயில் சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் பிரீமியம் நம்பர் பிளேட்டுகள் கிட்டத்தட்ட 50 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில்  RTA நடத்திய ஏலத்தில், AA70 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் சுமார் 3.82 மில்லியன் திர்ஹம்களுக்கு என மிகவும் விலையுயர்ந்த நம்பர் பிளேட்டாக விற்பனையாகியுள்ளது.

அதனையடுத்து, X 7777 என்ற நம்பர் பிளேட் 3.80 மில்லியன் திர்ஹம்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அதுபோல, Z 43 என்ற நம்பர் பிளேட் 2.85 மில்லியன் திர்ஹம்களையும், Y 96 நம்பர் பிளேட் 2.66 மில்லியன் திர்ஹம்களையும் மற்றும் S 888 என்ற பிளேட் 2.3 மில்லியன் திர்ஹம்களையும் இந்த ஏலத்தில் திரட்டியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த முதல் ஏலத்தை விட கடந்த வார இறுதியில் நடந்த ஏலம் 30 சதவீதம் அதிகமாக வருமானத்தை ஈட்டியுள்ளதாக RTA தெரிவித்துள்ளது. RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து இலக்கங்களைக் கொண்ட 90 ஃபேன்ஸியான நம்பர் பிளேட்டுகள் ஏலத்தில் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இத்தகைய நம்பர் பிளேட் ஏலங்கள் எப்போதும் பிரபலமானவை. குறிப்பாக, உலகின் மிக விலையுயர்ந்த 10 நம்பர் பிளேட்டுகளில் குறைந்தது எட்டு பிளேட்டுகள் அமீரகத்தில் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை அடையாளப்படுத்துவதாலும், அதிர்ஷ்ட எண்கள் என்பதாலும் இத்தைகைய நம்பர் பிளேட்களை அதிக விலைக்கு வாங்குவதாக RTA கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!