அமீரக செய்திகள்

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த நேரடி ஆய்வுகளை தீவிரப்படுத்தும் துபாய்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது கொரோனா பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், துபாயில் இருக்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும், வணிகர்களும், நுகர்வோரும், பொதுமக்களும் கொரோனா பரவலுக்கு எதிராக அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றுவதை உறுதிப்படுத்த நேரடி கள ஆய்வுகள் மேற்கொள்வதை துபாய் பொருளாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

துபாய் பொருளாதார துறை சார்பாக நேற்று வியாழக்கிழமை சத்வா பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டிருந்த வேளையில், அங்கு அமைந்துள்ள ஒரு உணவகம் கொரோனாவிற்கான நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த உணவகம் CCCP யால் மூட உத்தரவிடப்பட்டது. உணவகம் சார்பாக நேற்று இலவச உணவு விநியோகிப்பட்டதால் அதனை வாங்குவதற்கு வழிப்போக்கர்கள் கடையின் முன் கூடி, சமூக இடைவெளியை புறக்கணித்து, அதிக நெரிசலை ஏற்படுத்தியதன் காரணமாக அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று துபாயில் நடந்த மற்றொரு சம்பவத்தில், துபாய் பொருளாதார துறை துபாய் விளையாட்டுக் குழுவின் ஒத்துழைப்புடன் கொரோனா நெறிமுறைகளை மீறிய ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு அபராதம் விதித்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்ட உடற்பயிற்சி மையத்தில் குறிப்பாக வரவேற்பறையில் சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதற்காகவும் மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டதாக துபாய் பொருளாதார துறை தெரிவித்துள்ளது.

துபாயில் அமைந்துள்ள திறந்தவெளி சந்தைகள் மற்றும் வணிக மையங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் CCCP தினசரி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நேற்று துபாய் நகரம் முழுவதிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் 578 கடைகள் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றியதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

அத்துடன் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்கள், வணிகங்கள் குறித்து துபாய் நுகர்வோர் பயன்பாட்டின் மூலமாகவோ அல்லது 600545555 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.consumerrights.ae இணையதளத்திலோ புகார் தெரிவிக்குமாறும் துபாய் பொருளாதாரம் நுகர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!