அமீரக செய்திகள்

துபாயில் நாளை முதல் துவங்கப்படவுள்ள மாபெரும் உடல்நல கணக்கெடுப்பு..!! அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு வேண்டுகோள்…!!

துபாயில் நாளை (செப்டம்பர் 10 ஆம் தேதி) முதல் துபாய் வீட்டு சுகாதார ஆய்விற்கான (DHHS) நான்காவது பதிப்பை நடத்தப்போவதாக துபாய் சுகாதார ஆணையம் (DHA) அறிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பினை துபாய் டேட்டா & ஸ்டாட்டிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்போவதாக DHA கூறியுள்ளது.

இதில் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப உறுப்பினர்களின் சுகாதார நிலை, சுகாதாரச் செலவு மற்றும் சுகாதாரப் பயன்பாடு போன்ற உடல் நலன் தொடர்பான சிக்கல்கள் பற்றிய விரிவான தகவல்களை சேகரிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், செவிலியர்கள் குடியிருப்பாளர்களுக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகளையும் இலவசமாக எடுப்பார்கள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

துபாய் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேலும் மேம்படுத்துவதற்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கு தேவையான ஆதார அடிப்படையிலான தரவுகளை சுமார் 2,500 குடும்பங்களிடம் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு மூலம் சேகரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முதன்முதலில் 2009 இல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கணக்கெடுப்பு பின்வரும் நான்கு முக்கிய கருப்பொருள்களை உள்ளடக்கும் என கூறப்பட்டுள்ளது. அவை:

  • நோய்கள் மற்றும் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் (நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன்)
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் (புகையிலை பயன்பாடு, உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு)
  • ஆரோக்கியத்திற்கான செலவு (வெளிநோயாளர் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான செலவு)
  • சுகாதார சேவைகளின் தரம் (சுகாதார நிலை மற்றும் வழங்கப்பட்ட சேவைகளில் திருப்தி)

இது குறித்து துபாய் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் அவத் செகாயர் அல் கெட்பி அவர்கள் கூறுகையில், கணக்கெடுப்புச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் களக் குழுக்களுடன் மக்களின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் ஆணையம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டு முயற்சியின் மூலம் கணக்கெடுப்பின் வெற்றியை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதுமட்டுமின்றி, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் பயணத்தில் துபாய் முன்னேறி வருவதாகவும், இது மக்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்கிறது என்றும் டிஜிட்டல் துபாய், துபாய் டேட்டா மற்றும் ஸ்டேட்டிஸ்ட்டிக்ஸ் நிறுவனத்தின் CEO யூனுஸ் அல் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமிரேட்டில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களுடனான தனது கூட்டாண்மையை வலுப்படுத்த வேலை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரையடுத்து கணக்கெடுப்பு பற்றிப் பேசிய DHA இன் ஆராய்ச்சி, ஆய்வுகள் மற்றும் தரவு பகுப்பாய்வு துறையின் இயக்குநரும், துபாய் வீட்டு சுகாதார ஆய்வின் குழுத் தலைவருமான கலீத் அல் ஜல்லாஃப் அவர்கள், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியம் குறித்து துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளை சேகரிக்க உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கியால் சுகாதார கணக்கெடுப்பு பரிந்துரைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

எனவே, எமிரேட்டில் மக்களிடையே நேரடியாக கள ஆய்வு மற்றும் தகவல் சேகரிப்பு செய்வதன் மூலம் இது வெற்றிகரமாக அடையப்படும் என்று அவர் விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும் வகையில் கள சுகாதார ஆய்வின் நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் கணக்கெடுப்பு வாய்ப்பளிக்கிறது என்று அல் ஜல்லாஃப் வலியுறுத்தியுள்ளார். எனவே, இத்தகைய ஆய்வில் சமூகத்தின் உறுப்பினர்களை பங்கேற்குமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!