வளைகுடா செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா!!! வளைகுடா நாடுகளின் தற்போதைய நிலவரம் !!!

கொரோனாவின் பாதிப்பு உலகெங்கிலும் மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார் போன்ற அனைத்து வளைகுடா நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதில் பெரும்பாலானவை ஈரானில் இருந்து பரவியதாகவே இருக்கின்றன.

ஈரானில் இதுவரை 8,042 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 291 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை ஒட்டி, ஈரானில் 70,000 சிறைக்கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் நேற்றைய அறிவிப்பின் படி, அமீரகத்தில் இதுவரை 74 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர், மேலும், அதில் 17 பேர் குணமுடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமீரகம் மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஒரு மாதத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் கல்வி பாதிக்காத வகையில், வீட்டிலிருந்தே தொலைதூரக் கல்வி கற்கும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூடுதலாக, விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என சோதனையிட்ட பிறகே அவர்கள் அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

சவுதி அரேபியா

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சவுதி அரேபியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து தற்பொழுது மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் நியூயார்க்கில் இருந்து எகிப்து நாட்டின் கைரோவுக்கு, சவூதி அரேபியாவில் இருக்கும் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்அஸிஸ் விமான நிலையம் வழியாக பயணிக்கும் எகிப்து நாட்டை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் கொரோனாவினால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் சவுதி அரசு தங்கள் நாட்டிற்கு உம்ரா எனும் புனிதப் பயணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது. மேலும் அண்டை நாடுகளில் இருந்து அடையாள அட்டையைப் பயன்படுத்தி சவுதி அரேபியாவிற்குள் சாலை வழியாக செல்லும் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக சவுதி அரேபியா ஏற்கெனவே 9 நாடுகளுக்கு பயணம் செல்ல தடை விதித்த வேளையில், தற்பொழுது அந்தத் தடை 14 நாடுகளாக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், எகிப்து, லெபனான், ஈராக், இத்தாலி, தென் கொரியா மற்றும் சிரியா ஆகிய 9 நாடுகளுடன் தற்பொழுது பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், துருக்கி மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என சவுதி குடிமக்களுக்கும் அந்நாட்டில் வசிக்கும் மற்ற நாட்டவர்களுக்கும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

குவைத்

குவைத் நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாகவும் இரண்டு பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பினால் குவைத்தில் வசிக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், எகிப்து, லெபனான், சிரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குவைத் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கு விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஹ்ரைன்

பஹ்ரைன் நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட அறிக்கையில் இன்று மட்டுமே பஹ்ரைனில் 77 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரானிலிருந்து இந்த வாரம் விமானம் மூலம் வந்த குடிமக்களாவர். இதனால் பஹ்ரைனில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 189 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 30 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

கத்தார்

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கத்தாரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 என கத்தார் நாட்டின் சுகாதாரா அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நாட்டில் மேலும் வைரஸ் பரவலைத் தடுக்கும் வண்ணம் 15 நாட்டவர்களுக்கு கத்தார் அரசு தற்காலிகத் தடை விதித்தது. சீனா, இத்தாலி, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, ஈரான், ஈராக், லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கத்தார் நாட்டினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓமன்

ஓமனில் இதுவரை 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஈரான் நாட்டிலிருந்தே வைரஸானது பரவி இருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!