கொரோனா எதிரொலி : சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் விமானங்கள் ரத்து!!!
உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸானது தமிழ்நாட்டிற்கும் பரவியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு வேரூன்றியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறைக்கு மார்ச் 31 ம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயோமெட்ரிக் கருவியில் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது
மேலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, விமான நிலையங்களில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்திலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடல்நிலையைக் கண்காணிக்க 15 மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர விமான நிலையம் முழுவதையும் தூய்மையாக வைத்திருக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்பொழுது, வெளிநாட்டிற்கான விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து குவைத்திற்கு செல்ல வேண்டிய விமானங்களும் குவைத்திலிருந்து சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போன்று, சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் விமானத்தின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு குவைத் மற்றும் ஹாங்காங் நாடுகளில் அதிகளவில் இருப்பதாலும், பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 10 விமானங்களின் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பையொட்டி வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், பல நாடுகள் தங்களின் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் விமான சேவைகளும் குறைந்து, சர்வதேச அளவில் விமான நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.