குவைத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து…!!! வெள்ளிக்கிழமை முதல் அமல்..!!

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாடானது வரும் வெள்ளிக்கிழமை முதல் அந்நாட்டின் குவைத் சர்வதேச விமானநிலையத்திலிருந்து (Kuwait International Airport) புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் குவைத் நாட்டில் மார்ச் 12 முதல் மார்ச் 26 வரை பொது விடுமுறையையும் அறிவித்துள்ளது. கொடிய நோயான கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது வணிகரீதியிலான விமான சேவைகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் செய்தி நிறுவனம் இது பற்றிக் கூறுகையில், பொதுமக்கள் உணவகங்கள், கஃபேக்கள் (cafe) மற்றும் வணிக மையங்களில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
குவைத் நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாகவும் இரண்டு பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.