குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்து… 8 சிறுவர்கள் பலி!!!

குவைத் நாட்டில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் எட்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன. இது குவைத் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள சபா அல் அஹ்மத் பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக்கொண்ட 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், தீ விபத்து நடந்த நேரத்தில் வீட்டிலிருந்து தப்பிய இரண்டு பேர் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறி வருகின்றன. இவ்விருவரும் இந்த வீட்டினில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
வீட்டினுள் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்பு படைகள் உடனடியாக வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்தனர். இதில் பலியானவர்கள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் வீட்டினுள் இருந்து மீட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் காயம்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.