இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனாவின் பாதிப்பு : கேரளா மற்றும் கர்நாடகாவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!!!
உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனாவின் பாதிப்பானது கடந்த ஒரு மாதமாக பல்வேறு நாடுகளுக்கு அதிவேகத்தில் பரவியுள்ளது. தற்பொழுது 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸின் பாதிப்பு உள்ளது.
இந்தியாவில் கடந்த இரு வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு மிக அதிவேகத்தில் பரவியுள்ளது. அதற்கு முன்னர் வரை கேரளாவில் மட்டுமே ஒரு சில நபர்களுக்கு கொரோனாவின் பாதிப்பு இருந்தது. அவர்களும் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, சென்ற வாரம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஆரம்பித்த நிலையில், தற்பொழுது பல மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு உள்ளது.
அதிவேகமாகப் பரவி வரும் கொரோனாவின் பாதிப்பை தடுக்க இந்தியாவிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், ஒவ்வொரு நாளும் கொரோனாவால் புதுப்புது மனிதர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் கேரளாவை சேர்ந்த 6 பேரும், கர்நாடகாவை சேர்ந்த 4 பேரும் அடங்குவர்.
இந்தியாவில் கேரளவிலேயே கொரோனா வைரஸின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் அங்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மார்ச் 31 ம் தேதி வரை கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 7 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்படும் எனவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.