உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா…!!! சீனா, இத்தாலி நாட்டை விட அதிகம் பேர் பாதிப்பு..!!!

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பானது உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. கொரோனா வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கொரோனாவை இன்று வரை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடக்கத்தில் சில நாடுகளில் மட்டுமே இருந்த கொரோனாவின் பாதிப்பானது தற்பொழுது 165 நாடுகளுக்கும் மேலாக தன் பாதிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகளவில் 5 இலட்சத்திற்கும் மேலானோர் இதுவரை கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
இதுவரை 24,000 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி அமெரிக்காவிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் இதுவரை 85,749 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கொரோனாவின் பாதிப்பு தோன்றிய இடமான சீனாவைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையாகும். இதற்கு அடுத்ததாக கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி நாட்டை விடவும் அதிக எண்ணிக்கையாகும். சீனாவில் இதுவரை 81,340 பேரும் இத்தாலியில் இதுவரை 80,589 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஒரு நாளில் மட்டும் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,304 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் 15,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவின் பாதிப்பு அந்நாட்டின் மக்களிடையே பெரிதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைத்தொடர்ந்து அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையையாக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.