ஷார்ஜாவாசிகளுக்கு போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி அளிப்பதாக ஷார்ஜா நிர்வாக சபை (Sharjah Executive Council) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடைப்பட்ட காலங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் கரும் புள்ளிகளையும் (black points) நிறுத்தி வைப்பதாக மேற்கொண்டு கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் வசிக்கும் வணிக மற்றும் குடியிருப்பாளர்கள் மீதான பொருளாதார சுமையை குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா நிர்வாக சபை கூறியுள்ளது.
இந்த தள்ளுபடியானது மார்ச் 31க்கு முன்னர் செய்த போக்குவரத்துக்கு குற்றங்களுக்காக வழங்கப்பட்ட அபராதத்திற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஸாரி அல் ஷம்ஸி, நம் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்களும் இந்த புதிய தள்ளுபடி திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்றும், குறிப்பிடப்பட்டுள்ள இந்த காலகட்டத்திற்குள் நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் கூறுகையில், சிறிய மீறல்களில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களும் இதில் பொருந்தும் என்றார்.
இனிவரும் காலங்களில் போக்குவரத்துக்கு விதிமீறல்களில் ஈடுபடாத வண்ணம், அரசால் வகுக்கப்பட்டுள்ள போக்குவரத்துக்கு விதிமுறைகள் மற்றும் சட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அல் ஷம்ஸி கேட்டுக் கொண்டார்.