மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம் : UAE கல்வி அமைச்சகம் அறிவிப்பு!!
கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அனைத்து பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டின் கல்வி நிலையங்களிலுள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என உறுதியாகத் தெரிந்த பின்னரே மீண்டும் தங்களின் கல்வி நிலையங்களுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவானது அனைத்து தனியார் மற்றும் பொது கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக வெளிநாட்டிற்கு சென்றவர்களுக்கும் தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும், 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலை பின்பற்றவும் அறிவுறுத்தியது. அவர்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்காமல் அவர்கள் மீண்டும் கல்வி நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு மூடப்படும் என்று அமைச்சகம் அறிவித்தது. அதாவது பொது மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான இரண்டு வார விடுமுறைக்கு பதிலாக நான்கு வாரம் அளிக்கப்பட்டு மீதமுள்ள இரண்டு வாரங்களில் தொலை தூரக்கல்விக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது கல்விநிலையங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை “மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், மேலும் இது கொரோனா வைரஸ் (COVID -19) பரவுவதைக் குறைக்கும் நோக்கில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப உள்ளது” என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சகம் கூறியிருக்கிறது.