வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன..?? சிறு பார்வை..!!!
உலகெங்கிலும் பல மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. உலகிலுள்ள பல்வேறு மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாலும் இன்றளவும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக, சில நாடுகளில் மட்டுமே பரவி இருந்த கொரோனா தற்பொழுது உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் விமான சேவை நிறுத்தம், வைரஸ் பாதித்த பெரும்பாலான நாடுகளில் அனைத்து பணிகளும் நிறுத்தம், மக்கள் அனைவரையும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கை போன்ற பல செயல்பாடுகள் கொரோனா வைரஸையொட்டி பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளன. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலால் உலகமே முடங்கி கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பரவிய கொரோனா வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய அனைத்து நாடுகளும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை (ஏப்ரல் 6, 2020) கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை பற்றி கீழே காணலாம்.
ஐக்கிய அரபு அமீரகம்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 2076
உயிரிழந்தோரின் எண்ணிக்கை : 11
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 167
மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமீரகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு நாடுகளுக்கான விமான சேவை ரத்து, வெளிநாடுகளில் இருக்கும் பயணிகள் அமீரகத்திற்கு வரத்தடை, சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தம், அமீரகத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுதல், பொது மக்களுக்கான பொழுதுபோக்கு இடங்களை மூடுதல், அமீரகம் முழுவதும் தீவிர சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமே இருக்கிறது.
மேலும், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு தொலைதூரக் கல்விக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. தற்பொழுது கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் அமீரகம் முழுவதிலும் தீவிர சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் சமயங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, துபாயில் இந்த சுத்திகரிப்பு பணிகளானது இரு வாரங்களுக்கு நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இரு வாரங்களுக்கு பொதுமக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து அல்லது முக்கிய துறைகளில் வேலை பார்ப்பவர்கள் அல்லாது மற்றவர்கள் காரணமின்றி வெளியே வருவர்களேயானால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 2523
உயிரிழந்தோரின் எண்ணிக்கை : 38
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 551
மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள்
சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பகட்டத்தில் எவரும் அந்நாட்டில் பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் சவூதி அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனாவின் பாதிப்பையொட்டி அந்நாட்டு அரசாங்கம் பல நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.
சவுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல தடை, தனியார் துறை சார்ந்த அனைத்து தொழில்களும் தற்காலிக நிறுத்தம், உம்ரா எனும் புனிதப்பயணம் நிறுத்தம், பொதுமக்களின் போக்குவரத்திற்குப் பயன்படும் டாக்ஸி, பேருந்து, ரயில் உட்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தம் போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சவூதி மன்னர் சல்மான் அவர்களால் சவுதியில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவானது அறிவிக்கப்பட்டது. பின்னர் இதில் சவுதியில் உள்ள இரு புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு இடங்களிலும் முழு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, அந்நாட்டில் ரெசிடென்ஸ் விசா விதிமுறைகளை மீறியவர்கள் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்குவதாக மன்னர் சல்மான் அவர்கள் அறிவித்திருந்தது வரவேற்கத்தக்கதாகும்.
குவைத்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 665
உயிரிழந்தோரின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 103
மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள்
வளைகுடா நாடுகளில் குவைத் நாடே முதன் முதலில் கொரோனா பாதிப்பையொட்டி வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை விதித்த நாடாகும்.
அந்நாட்டில் கொரோன வைரஸ் தொடர்ந்து பரவுவதால் அதற்கு தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், மசூதிகள் என அனைத்தும் மூடப்பட்டன.
மேலும் அந்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் தற்பொழுது குவைத் நாட்டில் மூடப்பட்டுள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் மாதம் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் 46 வயதுடைய இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 1604
உயிரிழந்தோரின் எண்ணிக்கை : 4
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 123
மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள்
கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அங்கேயும் மற்ற நாடுகளுக்குண்டான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய துறைகளை சாராத அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்தகங்கள் போன்ற கடைகள் மட்டுமே இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
மேலும்,அந்நாட்டு அரசாங்கம் ஷாப்பிங் மால்களில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் மட்டும் செயல்பட மாநாட்டு அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதையொட்டி அங்கு அனைத்து இறைவளிப்பாட்டு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
பஹ்ரைன்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 723
உயிரிழந்தோரின் எண்ணிக்கை : 4
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 451
மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள்
வளைகுடா நாடுகளிலேயே பஹ்ரைன் நாட்டில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் மற்ற வளைகுடா நாடுகளைக் காட்டிலும் அதிகம் பேர் குணமடைந்துள்ளனர். இந்நாட்டு அரசாங்கம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சினிமா தியேட்டர்களை மூடுதல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க அறிவுறுத்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் பஹ்ரைன் அரசு பொதுமக்களை தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அந்நாட்டில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் டிரான்சிட் விமான சேவைகளுக்கு மட்டும் அதாவது ஒரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு பஹ்ரைன் விமான நிலையத்தின் வழியாக செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஓமான்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : 331
உயிரிழந்தோரின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 61
மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓமன் மேற்கொண்டுள்ளது. சுற்றுலா விசாக்கள் வழங்குவதை ரத்து செய்தல் மற்றும் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் நிறுத்துதல், ஓமனின் துறைமுகங்களுக்கு சுற்றுலா கப்பல்கள் நுழைவதை தடை செய்தல் ஆகியவை அவற்றில் அடங்கும்.
மேலும், பொதுமக்கள் தேவையின்றி ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலதிக அறிவிப்பு வரும் வரை ஓமனிலுள்ள முத்ரா மாகாணத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அந்த மாகாணத்திலிருந்து வெளிச்செல்லவும் உள்நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.