வளைகுடா செய்திகள்

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவக்குழு குவைத் வருகை..!!! குவைத் அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு முடிவு..!!!

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் குவைத் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து 15 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் அடங்கிய ‘உடனடியாக செயல்படும் மருத்துவக்குழு’ (Rapid Response Team) ஒன்று சனிக்கிழமை (ஏப்ரல் 11, 2020) குவைத் நாட்டை வந்தடைந்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S.ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் ஹமாத் அல் சபா (Sheikh Sabah Al Khaled Al Hamad Al Sabah) ஆகியோருக்கு இடையிலான சமீபத்திய தொலைபேசி உரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இரு தலைவர்களும் உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக ஒருங்கிணைந்து பணியாற்றும் முயற்சிக்கு ஒப்புக் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று குவைத் வந்தடைந்த இந்திய மருத்துவ குழு, இரண்டு வார காலத்திற்கு குவைத்தில் தங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவக் குழு, தங்கியிருக்கும் இந்த இரு வாரங்களில் குவைத்தில் கொரோனா தொற்றை கண்டறிய தனிப்பட்ட நபர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றை குவைத் நாட்டின் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில், “குவைத் மற்றும் இந்திய நாட்டின் பிரதமர்களுக்கு இடையே நடந்த ஆலோசனையை தொடர்ந்து, இந்தியாவிலிருந்து கொரோனாவை எதிர்த்து போராட ‘உடனடியாக செயல்படும் குழு’ (Rapid Response Team) குவைத் வந்தடைந்தது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான சிறந்த நட்பை வெளிக்காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடலுக்குப் பிறகு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் டாக்டர் அஹ்மத் நாசர் அல் முகமது அல் சபா (Sheikh Dr. Ahmad Nasser Al Mohammad Al Sabah) ஆகியோர் தோலைபேசியின் வாயிலாக குவைத்தில் நிலவும் சூழ்நிலையைப் பற்றியும், இந்த சவாலான காலங்களில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது பற்றியும் கலந்துரையாடியுள்ளனர்.

குவைத் நாட்டில் இதுவரையிலும் 1,154 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொற்று நோய்க்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இந்திய நாட்டை சேர்ந்தவர் ஆவார். குவைத் நாட்டில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு குடியிருப்பாளர்களில் இந்தியர்களே அதிகம். சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அங்கு வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!