துபாய் பஸ், மெட்ரோ, டாக்ஸி பயண நேரங்கள் மாற்றியமைப்பு..!!! RTA புதிய அட்டவணை வெளியீடு..!!!
துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாயில் இருக்கும் பயணிகளுக்கு பொது போக்குவரத்திற்கான புதிய கால அட்டவணையை அறிவித்துள்ளது.
இந்த புதிய அட்டவணையின்படி, துபாய் மெட்ரோ மற்றும் துபாய் டிராம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்துகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயக்கப்படும் என்றும், மருத்துவமனை வழியாக செல்லக்கூடிய குறிப்பிட்ட சில பேருந்துகள் மட்டும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று துபாய் நகரில் இயங்கக்கூடிய டாக்சிகள் அனைத்தும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முழுமையாக இயங்கும். ஆனால் உபெர் (Uber) மற்றும் கரீம் (Careem) போன்ற ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யக்கூடிய வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
New timetables for #DubaiMetro, #DubaiTram, buses, and taxis to secure essential trips during the implementation of the National Sterilisation Programme.#WeAreCommitted #RTA pic.twitter.com/zZv6YzdU74
— RTA (@rta_dubai) April 1, 2020
இருப்பினும் மெரைன் போக்குவரத்திற்காக (Marine Transport) ஈடுபடுத்தப்படும் படகுகள் உட்பட அனைத்து கடல் போக்குவரத்தும் ஒரு மாத காலத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் காரணமாக, பொது போக்குவரத்துக்கான கால அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக RTA அறிவித்துள்ளது.