வளைகுடா செய்திகள்

ஓமானில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு..!!

ஓமானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் இன்று காலை 7.55 மணியளவில் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானின் மத்திய கிழக்கு பகுதியிலும் மஸ்கட்டில் இருந்து தென்மேற்கே 450 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள துக்ம் (duqm) நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் அப்பகுதியில் லேசான நடுக்கம் மட்டுமே உணரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறியளவில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக குடியிருப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அழைப்புகளை தொடர்ந்து ராயல் ஓமன் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் இந்த நிலநடுக்கத்தின் விளைவாக காயங்கள் அல்லது சேதங்கள் பற்றிய எந்த அழைப்புகளும் பதிவாகவில்லை என்று தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது.

பொதுவாக 3.5 க்கும் குறைவான அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் நில நடுக்கங்கள் உணரப்படுவதில்லை. அதே சமயம் 3.5 முதல் 5.5 வரை அதிர்வுகளை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன. ஆனால் இவை அரிதாகவே சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதுவே 6 க்கும் மேலான ரிக்டர் அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் நிலநடுக்கமானது சிறியது முதல் பெரியளவிலான சேதங்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 அளவிலான பெரிய நிலநடுக்கத்துடன் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் தற்பொழுது வரை 46,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதும் வேதனைக்குரிய விஷயமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!