வளைகுடா செய்திகள்

கொளுத்தும் வெயிலில் வீட்டு விலங்குகளை வெளியில் விடுவது சட்டப்படி குற்றம்… கடும் அபராதம் விதிக்கப்படும் என சவூதி எச்சரிக்கை!!

கோடை காலத்தில் வீட்டு விலங்குகளை எப்படி நடத்த வேண்டும் என்று விலங்குகளின் உரிமையாளர்களுக்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது சவுதி அரேபியா அரசு. விலங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் விலங்குகளை மேய்ப்பவர்கள் தங்கள் விலங்குகளை கொளுத்தும் வெயிலில் விட வேண்டாம் என்று சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்பொழுது நிலவும் கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அதன் மூலம் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், பொதுமக்களுக்கு தற்பொழுது இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) விலங்குகள் நலச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, விலங்கு நலக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு விலங்கு உரிமையாளர்களுக்கு அமைச்சகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, கடுமையான வெப்பத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க நிரந்தரமாக உணவு மற்றும் தண்ணீரை வழங்குவதன் மூலம் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சகத்தின் ஊடக மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விலங்குகள் நலனுக்கான தரநிலைகள் மற்றும் தேவைகளைப் பயன்படுத்த விலங்குகள் நல வாரியத்தில் விண்ணப்பிக்குமாறும், தடுப்பூசிகளை சரியாக செலுத்த வேண்டும் எனவும், கோடைக்காலத்தில் நேரடி சூரிய ஒளியில் இருந்து அவற்றை விலக்கி வைக்க வேண்டும் எனவும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது விலங்குகள் நலமுடன் உள்ளனவா என்பதை சரி பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், விலங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அமைச்சகம், மனிதர்களைச் சார்ந்திருக்கும் எந்த விலங்கையும் கவனிக்காமல் கைவிடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதைக் கைவிட விருப்பம் ஏற்பட்டால், தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவரால் பரிசோதனை மற்றும் சிகிச்சையின் மூலம் விலங்குகளின் சுகாதார நிலையை உறுதி செய்து, தகுதிவாய்ந்த அதிகாரியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

எந்தவொரு வகையிலும் விலங்குகளை துன்பப்படுத்தினால், அது விதிமீறலாக கருதப்பட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குறிப்பிட்ட நபருக்கு அதற்கான அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் விலங்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பவை பற்றி கண்காணிப்பு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!