எமிரேட்ஸ் NBD வங்கியில் பணிபுரியும் 800 ஊழியர்கள் பணிநீக்கம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான எமிரேட்ஸ் NBD வங்கி கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தினை சரி செய்யும் விதமாக தங்களிடம் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்பொழுது எமிரேட்ஸ் NBD வங்கியில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், அதன்படி வங்கியானது தனது ஊழியர்களில் 10 சதவீதத்தினரை அதாவது 800 பேரை பணி நீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் NBD வங்கியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பொருளாதாரம், நிதி சேவை, கடன் போன்ற துறைகளில் ஏற்படுத்திய தாக்கங்களின் காரணமாக வங்கியின் செயல்பாடுகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு வழிவகுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வரவிருக்கும் சவாலான காலங்களில், வங்கி தனது தொழில் வளர்ச்சியினை அடைவதற்கு ஏதுவாக தனது பணியாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் வேலை செய்பவர்களை பணி நீக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் நன்றாக யோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமீரகத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் எமிரேட்ஸ் NBD வங்கி தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.