வளைகுடா செய்திகள்

வந்தே பாரத் 3-ம் கட்ட திட்டதில் கத்தார், பஹ்ரைன், ஓமான், சவூதியிலிருந்து செல்லும் விமானங்களின் பட்டியல்..!!

இந்திய அரசால் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கைக்கான விமானங்களின் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு செல்ல கூடிய விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், ஓமான் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு செல்ல இருக்கும் விமானங்களின் விபரங்களை தூதரகங்கள் வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியா

சவூதி அரேபியாவில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கையில் 20 விமானங்கள் இந்தியாவிற்கு செல்ல விருக்கின்றன. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுக்கே செல்கின்றன. தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே, சவூதியில் இருந்து தமிழகத்திற்கு மூன்று விமானங்களை மட்டுமே இந்திய அரசு இரண்டாம் கட்ட நடவடிக்கையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கத்தார்

கத்தார் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் 21 விமானங்களில் மூன்று விமானங்கள் தமிழகத்திற்கு செல்லவிருக்கின்றன. அதில் கத்தாரின் தலைநகரான தோஹாவிலிருந்து ஜூன் 11 ம் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும், ஜூன் 17 ம் தேதி மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கும் மற்றும் ஜூன் 19 ம் தேதி கோவை சர்வதேச விமான நிலையத்திற்கும் என விமானங்கள் செல்லவிருக்கின்றன.

பஹ்ரைன்

பஹ்ரைன் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு இதுவரையிலும் விமானம் இயக்கப்படாத நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட நடவடிக்கையில், பஹ்ரைனிலிருந்து சென்னைக்கு மூன்று விமானங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று விமானங்களும் பஹ்ரைனிலிருந்து ஜூன் 9 , ஜூன் 10 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளில் பஹ்ரைனில் இருக்கும் தமிழர்களை விமானங்களில் ஏற்றிக்கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான்

ஓமானிலிருந்து இந்தியாவிற்கு மொத்தம் 14 விமானங்கள் மூன்றாம் கட்ட நடவடிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ஒரு விமானம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜூன் 13 ம் தேதி ஓமான் தலைநகரம் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து அங்கிருக்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!