அமீரக செய்திகள்

இந்தியர்கள் அமீரகம் திரும்ப “NOC” கடிதம் தேவையா..?? ICA அதிகாரி விளக்கம்..!!

விமான போக்குவரத்து தடையின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் திரும்ப முடியாமல் இந்தியாவிலே சிக்கியுள்ள அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்புவது தொடர்பாக, இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதரகம் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது.

அந்த அறிவிப்பில், “அமீரக அரசின் அனைத்து நிபந்தனைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில், சில அத்தியாவசிய தேவையில் இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்புபவர்களுக்கு மனிதாபிமான முறையில்  ஐக்கிய அரபு அமீரகம் “நோ அப்ஜெக்சன் லெட்டர் (NOC)” வழங்கும் என்பதை நினைவில் கொள்க” என்று புதுதில்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

“இந்தியாவில் தற்போது உள்ள செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் கவனத்தை @UAEembassyIndia ஈர்க்க விரும்புகிறது. இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு @ICAUAE இலிருந்து தேவையான ஒப்புதல் பெற வேண்டிய அதே வேளையில், அமீரகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளும் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்வது அவசியம்” என்று அமீரக தூதரகம் தெரிவித்திருந்தது.

இந்த புதிய அறிவிப்பால் இந்தியாவில் இருக்கக்கூடிய அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் பெரிதும் குழப்பமடைந்தனர். அமீரக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், அமீரகம் திரும்ப ICA ஒப்புதல் பெறுவது அவசியம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவிற்கான அமீரக தூதரகம் வெளியிட்ட இந்த புதிய செய்தியால் அமீரகம் திரும்ப நாட்களை எண்ணிக்கொண்டிருந்த பலரும் கலக்கமடைந்தனர்.

இந்நிலையில், இந்த புதிய செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் ICA வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் காமிஸ் அல் காபி இன்று விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “தற்போது இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) பயண ஒப்புதல்களைப் பெற வேண்டும். ICA விடம் இருந்து அவர்கள் பெறும் ஒப்புதலே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பதற்கான NOC ஆகும். வேறு எந்த சிறப்பு NOC யும் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் மனிதாபிமான தேவைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை கிடைக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், “விண்ணப்பதாரர்கள் அமீரகம் திரும்புவதற்கான காரணங்களைக் குறிப்பிடலாம். அமீரக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு சிறப்புக் குழு அனைத்து விண்ணப்பங்களையும் சரிபார்த்து அத்தியாவசிய தேவையுள்ளவர்களுக்கு மனிதாபிமான முறையில் முன்னுரிமை அளிக்கும்” என்றும் அல் காபி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் அமீரகம் திரும்புவதற்கான ஒப்புதலை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் குடியிருப்பாளர்கள் smartservices.ica.gov.ae எனும் ICA வலைத்தளத்திலோ அல்லது +971600522222, +97123128867 அல்லது +97123128865 என்ற தொலைபேசி எண்களிலோ கால் செண்டரை தொடர்பு கொள்ளலாம் என்று புதுடெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம் தனது டீவீட்டில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!