UAE : ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் தேடப்பட்ட நபர் பாலைவனத்தில் சடலமாக மீட்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் அய்னில் கடந்த ஒன்றரை மாதமாக காணாமல் தேடப்பட்ட நபர் தற்பொழுது அல் அய்னில் இருக்கும் பாலைவனப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அல் அய்னில் இருக்கக்கூடிய அல் அம்ரா பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கடந்த ரமலான் மாதத்தில் காணாமல் போயிருந்த நிலையில் தற்பொழுது அல் அய்னில் இருக்கக்கூடிய பாலைவனத்தின் தொலைதூரப்பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தனது வண்டியை பாலைவனத்திற்குள் செலுத்திய பின்பு, வழியை மறந்து அந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. அவரது வாகனம் பாலைவனத்தில் சிக்கிக்கொண்டதுடன், உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால் அபுதாபி காவல்துறையினர் அவர் சாப்பிடாமல் தான் உயிரிழந்தார் என்று கூறப்படுவதை மறுத்துள்ளனர். மேலும், இது குறித்த விசாரணையில் வரும் தகவலை அதிகாரப்பூர்வ பக்கங்களில் சென்று பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று அமீரகத்தில் பல முறை பொழுதுபோக்கிற்காக பாலைவனத்திற்குள் தங்களது வண்டியை செலுத்திய பிறகு வழியை மறந்து பாலைவனத்திலேயே சிக்கிக்கொண்ட குடும்பங்கள் உட்பட பல நபர்களை காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று மீட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.