ஜூன் 10 முதல் குவைத் நாட்டின் சில பகுதிகளில் வழிபாட்டிற்காக மசூதிகள் திறப்பு..!!
குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் வணக்க வழிபாடுகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது குவைத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக குவைத் நாட்டின் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் வரும் புதன்கிழமை (ஜூன் 10, 2020) முதல் அந்நாட்டின் சில பகுதிகளில் மசூதிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் வளைகுடா நாடுகளிலேயே குவைத் நாட்டில்தான் முதலாவதாக மசூதிகளில் தொழுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் மசூதிகளானது மூன்று மாதங்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
குவைத் நாட்டின் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் பஹத் அல் அஃபாசி (Minister of Awqaf and Islamic Affairs, Dr. Fahad Al Afasi), குறிப்பிட்ட சில குடியிருப்பு (model residential) மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட (sparsely-populated) பகுதிகளில் வரும் புதன்கிழமை மதிய நேர தொழுகை முதல் ஐந்து வேளை தொழுகைகளுக்கும் வழிபாட்டாளர்கள் மசூதிகளில் சென்று தொழுகலாம் என்று கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது.
இருப்பினும், வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு தொழுகையானது குவைத் நகரில் உள்ள பெரிய மசூதியில் (Grand Mosque) மட்டுமே நடைபெறும் என்றும், இந்த சிறப்பு தொழுகையில், அந்த மசூதியில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விளக்கியுள்ளார்.
மசூதிகளை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சகம் நிறைவு செய்துள்ளதாகவும், வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் கூறியுள்ள அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் மேற்கொள்ளப்படுவதாகவும் அல்-அஃபாசி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
Kuwait to reopen mosques in some areas as of Wed. https://t.co/2ENFUwCUGN #KUNA #KUWAIT
— Kuwait News Agency – English Feed (@kuna_en) June 7, 2020