பஹ்ரைன் : வெளிநாட்டினருக்கான இலவச மருத்துவ ஆலோசனை மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிப்பு..!!
கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து பஹ்ரைன் நாட்டில் இருக்கும் அரசு சுகாதார மையங்களில் வெளிநாட்டினருக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது தற்போது மேலும் நீட்டிக்கப்படுவதாக பஹ்ரைன் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கான மருத்துவ ஆலோசனை கட்டணம் வரும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனாவின் பாதிப்புகள் இன்றளவும் தொடர்வதால் மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் இருக்கும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் வரையிலும், அரசு சுகாதார மையங்களில் மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு கட்டணமாக ஏழு பஹ்ரைன் தினார் செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.