கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைவு..!! புதிய சாதனை படைத்த கத்தார்..!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாடானது கொரோனா வைரசிற்கான சிகிச்சையில் புதிய ஒரு சாதனையை படைத்துள்ளது. அந்நாட்டில் தற்பொழுது வரை கொரோனா வைரஸினால் பாதிப்படைந்தவர்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளிலேயே சவூதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிகளவு கொரோனா பாதிப்பைக் கொண்டிருந்த நாடு கத்தார் ஆகும். மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமான் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் 50,000 க்கும் அதிகமான மொத்த கொரோனா பாதிப்புகளைக் கொண்டிருந்தாலும் சவூதி அரேபியாவே மொத்த அளவில் 2 இலட்ச்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளைக் கொண்டிருக்கும் நாடாகும். அதற்கு அடுத்தபடியாக கத்தார் நாட்டில் இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நேற்று (ஜூலை 13) ஒரு நாளில் மட்டும் 418 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணக்கையானது 104,016 ஆக அதிகரித்துள்ளது.
எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரு நாளில் மட்டும் 884 பேர் குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 104,016 மக்களில் 100,627 பேர் முழுவதுமாக குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது அந்நாட்டில் 3,240 பேர் மட்டுமே கொரோனாவிற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அந்நாட்டில் கொரோனாவிற்காக செய்யப்பட்ட மொத்த சோதனைகள் 416,327 ஆகவும் இதுவரையிலும் அந்நாட்டில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கையானது 149 ஆகவும் உள்ளது. உலகளவில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் குறைந்த அளவு இறப்பு விகிதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் கத்தார் நாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.