கத்தார் : ஆகஸ்ட் 1 முதல் விமான போக்குவரத்து தொடக்கம்..!! குடியிருப்பாளர்கள் நாடு திரும்பவும் அனுமதி..!!
கத்தார் நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்ப்பட்டுவருவதை தொடர்ந்து, கத்தார் நாட்டு குடிமக்கள் மற்றும் கத்தார் நாட்டு நிரந்தர குடியுரிமை வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு எந்த நேரத்திலும் பயணம் சென்று திரும்பலாம் எனவும், அதே போன்று விமான தடையின் காரணமாக நாட்டிற்கு வெளியே வசிக்கும் செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் கத்தார் நாட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்படுவர் எனவும் கடந்த புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிப்படைந்திருந்த நாடுகளில் குறைந்த ஆபத்துள்ள நாடுகள் என கண்டறியப்படும் நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு வருபவர்கள், விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்படுவதைக் கடைப்பிடிப்பதற்கான முறையான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என்றும் அரசாங்க தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) தெரிவித்திருப்பதாக கத்தார் செய்தி நிறுவனம் (QNA) தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இது குறித்து கூறுகையில், குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் பட்டியல் பொது சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் GCO தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில், குறைந்த ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளில், தங்கள் நாடுகளில் இருக்கக்கூடிய அங்கீகாரம் பெற்ற சோதனை மையத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ்களை கொண்டு வரும் பயணிகள் விமான நிலையத்தில் கொரோனாவிற்கான சோதனை எடுக்க வேண்டியதில்லை எனவும் விளக்கமளித்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நான்கு கட்டங்களாக நீக்கப்படும் என கத்தார் அரசு அறிவிக்கப்பட்டதில் தற்போது ஆகஸ்ட் 1 முதல் மூன்றாம் கட்டம் தொடங்குவதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.