அமீரகம் பயணிப்பவர்கள் விமான பயண முன்பதிவிற்கு முன் பயண ஆவணத்தை சரிபார்க்க ICA அறிவுறுத்தல்..!!
செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்சி விசா வைத்திருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள், அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) முன் பயண ஒப்புதல் (Entry Permit) இல்லாமல் இன்று (ஆகஸ்ட் 12) முதல் அமீரகம் திரும்பலாம் என அறிவித்திருந்தது. இது வெளிநாட்டில் பல மாதங்களாக ICA ஒப்புதல் கிடைக்காமல் சிக்கித்தவித்த பல குடியிருப்பாளர்களுக்கு பெரும் மகிச்சியையையும் தந்துள்ளது.
எனினும் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆறு மாதங்களுக்கும் மேல் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்களில் தற்போது செல்லுபடியாகும் விசா வைத்திருப்பவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்துமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து ICA வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அமீரகம் திரும்ப விரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள், தங்களின் பயண ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள https://uaeentry.ica.gov.ae என்ற இணையதளத்தில் பாஸ்போர்ட் எண், எமிரேட்ஸ் ஐடி எண், நேசனாலிட்டி மற்றும் பாஸ்போர்ட் வகையை குறிப்பிட்டு தங்களின் பயண நடைமுறைகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
மேலே கூறப்பட்ட இணையதளத்தில் குறிப்பிட்ட விபரங்களை பதிவிடும் நபரின் பயண ஆவணங்கள் ICA வால் சரிபார்க்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு உடனடியாக ஒரு செய்தி அனுப்பப்படும். அந்த செய்தியில் “நாட்டிற்குள் நுழைவதற்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள், மேலும் உங்கள் பயண நடைமுறைகளை நிறைவுசெய்து உங்கள் பயணத்தை நீங்கள் தொடரலாம். நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கவும் வாழ்த்துக்கள்” என தெரிவிக்கப்படும்.
இதேபோன்ற செய்தியை நீங்கள் பெற்றால், உங்கள் விமான பயண டிக்கெட்டை முன்பதிவு செய்து, ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி அமீரகம் பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகளில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் லேசான மற்றும் கடுமையான குறைபாடுகள் உள்ளவர்கள் தவிர அனைவரும் பயணத்திற்கு முன் கட்டாய PCR கோவிட் -19 நெகடிவ் சோதனை முடிவுகளை கொண்டிருக்க வேண்டும் எனவும், இந்த கொரோனா சோதனை முடிவுகள் UAE அல்லது உள்ளூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து 96 மணிநேர பயணத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ICA கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Procedures for residents’ arrival to the UAE
____
#ICA #IdentityandCitizenship #UAE #COVID19 pic.twitter.com/vCzcy1Bksw— Identity and Citizenship- UAE (@ICAUAE) August 12, 2020