கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க COVID-19 நெகடிவ் ரிசல்ட் மற்றும் ஒப்புதல் படிவம் கட்டாயம்..!! கத்தார் ஏர்வேஸ் அறிவிப்பு..!!
கத்தார் நாட்டில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு தற்போது குறிப்பிட்ட நாடுகளுக்கு கத்தார் நாட்டின் தேசிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் விமான சேவைகளை வழங்கி வரும் நிலையில், தற்போது குறிப்பிட்ட நாடுகளின் சர்வதேச விமான நிலையங்களிலிருந்து கத்தார் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளது.
இது குறித்து கத்தார் ஏர்வேஸ் தனது வலைதள பக்கத்தில், தற்சமயம் விமான சேவைகளை வழங்கி வரும் நாடுகளை சேர்ந்த விமான நிலையங்கள் மற்றும், விரைவில் விமான சேவைகளை தொடங்கவிருக்கும் நாடுகளின் விமான நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து கத்தாரிற்கு பயணிக்கும் பயணிகள், பயணம் மேற்கொள்ள எதிர்மறையான COVID-19 RT-PCR மருத்துவ சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் எனவும், அத்துடன் சேர்த்து தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒப்புதல் படிவத்தையும் (consent form) வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இவ்விரண்டும் இல்லாத பயணிகள் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அதில் தெரிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 13 ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் இந்த புதிய விதியின்படி, கத்தார் ஏர்வேஸில் பயணிப்பவர்கள், கத்தார் ஏர்வேஸால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட COVID-19 எதிர்மறை சோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்மறையான சோதனை முடிவுகளை கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பயணிக்கும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் கத்தார் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய விதியானது கத்தார் ஏர்வேஸ் தற்பொழுது விமான சேவைகளை வழங்கி வரும் பங்களாதேஷ், பிரேசில், ஈரான், ஈராக், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், இதே போன்று கூடிய விரைவில் விமான சேவைகளை தொடங்கவுள்ள நாடுகளான இந்தியா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் பொருந்தும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் கத்தாரிற்கும் இடையே விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டவுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகள் ICMR ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மூலம் பெறப்பட்ட கொரோனாவிற்கான எதிர்மறை சோதனை முடிவுகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.