கொரோனா சோதனையில் முதலிடம் பிடித்த அமீரகம், பஹ்ரைன்.. மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேல் சோதனை மேற்கொண்டு சாதனை..!!
உலகில் இருக்கும் நாடுகளில் தனது மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் முதல் வரிசையில் தற்பொழுது பஹ்ரைன் நாடும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை அடைந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்த படியாக பஹ்ரைன் இணைந்துள்ளது.
ஐ.நாவின் தரவுகளின்படி, பஹ்ரைனில் மொத்தம் 858,249 பேர் கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது பஹ்ரைன் நாட்டில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 50.3 சதவீதம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் இருக்கும் மொத்த மக்கள் தொகையானது 1,706,181 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, மொனாக்கோ (38,000), ஜிப்ரால்டர் (33,000) மற்றும் பால்க்லேண்ட் தீவுகள் (3,000) போன்ற சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகள் மட்டுமே தங்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் ஆகியோரின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 50 சதவீதத்தினருக்கும் மேல் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளன.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடான ஐக்கிய அரபு அமீரகம் அதன் மொத்த மக்கள்தொகையில் (குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்) 52.7 சதவீத மக்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து டென்மார்க் அதன் மொத்த மக்கள்தொகையில் 27.7 சதவீதமும் அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் அதன் மொத்த மக்கள் தொகையில் 25.2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் மில்லியனிற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் சதவீத அடிப்படையில் பார்க்கும்போது அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் முதல் இடங்களிலும், மொனாக்கோ, ஜிப்ரால்டர் போன்ற குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளையும் சேர்த்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு நாடுகளும் கொரோனா பரிசோதனை விகிதங்களில் உலகளவில் ஐந்தாவது மற்றும் ஏழாவது இடங்களிலும் உள்ளன.
பஹ்ரைனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 91.4 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை விகிதம் அதிகளவு கொண்ட நாடுகளில் பஹ்ரைன் நாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வளைகுடா நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் சராசரி எண்ணிக்கை விகிதமானது (75%) உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கையை விட (57%) அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.