வளைகுடா செய்திகள்

குவைத் : வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் அனைத்து வகை விசாக்களும் தற்காலிக நிறுத்தம்..!!

குவைத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளில் இருந்து குவைத்திற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி பெற்ற 400,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் குவைத்துக்கு வெளியே சிக்கித் தவிப்பதாக குவைத் நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவரப்படி செல்லுபடியாகும் குவைத் ரெசிடென்ஸ் அனுமதி வைத்திருந்து தற்பொழுது வெளிநாடுகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை 426,871 ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காலாவதியான ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களும் அவர்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்படும் வரை குவைத்துக்கு திரும்ப வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் தற்போதைய குடியிருப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டு வருவதாகவும், அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் அன்வர் அல் பர்ஜாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான புதிய விசாக்களும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த பின்னரே புதிய விசா வழங்கல் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேஜர் ஜெனரல் அன்வர் அல் பர்ஜாஸ் மேலும் தெரிவிக்கையில், 2020 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான பணி ஒப்பந்தங்கள் அல்லது குடியிருப்பு விசாக்கள் வைத்திருப்பவர்கள் எந்த அபராதமும் இன்றி நாட்டை விட்டு வெளியேற முடியும் என்றும், அவ்வாறு குவைத்தை விட்டு வெளியேறுபவர்கள் புதிய விசா பெற்றுக்கொண்டு குவைத்திற்கு மீண்டும் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார், அதே நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் சட்டரீதியான விளைவுகளையும் அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும், மேலும் அவர்கள் நாடு கடத்தப்பட்டு, மீண்டும் குவைத் நாட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!