அமீரக செய்திகள்

துபாய் : கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக கடற்கரை சென்ற 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்பொழுது வரை சுமார் 700 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் காவல்துறையின் துறைமுக காவல் நிலைய இயக்குநர் கலோனல் சயீத் அல் மதானி (Colonel Saeed Al Madhani, acting director of Dubai Ports Police Station) இது குறித்து கூறுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை விதிமீறலில் ஈடுபட்ட 721 பேருக்கு கடற்கரை பாதுகாப்பு ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளதாக கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “துபாய் கடற்கரைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறும் எவரையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பாதுகாப்பு நெறிமுறைகளை மீறும் நபர்களை மிதிவண்டிகள், ரோந்து படகுகள், டிரோன்கள் போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்திக் கண்டறிந்தோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரோன்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஸ்கேன் செய்ய கேமராக்கள் உள்ளன, அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க கடற்கரைப் பயணிகளுக்கு குரல் செய்தியை (voice message) ஒலிபரப்ப ஒரு அம்சமும் அதில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த மே மாதத்தில், JBR, அல் மம்சார் (Al Mamzar), ஜுமேரா (Jumeirah) மற்றும் உம் சுகீம் (Umm Suqeim) உள்ளிட்ட கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இருப்பினும், கடற்கரை செல்வோர் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், போதுமான சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் குழுக்களாக செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. முக கவசம் அணியாமல் இருப்பது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறினால் 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!