அமீரக செய்திகள்

UAE: இந்தியர்களை அதிகம் கவரும் துபாய்.. சுற்றுலா செல்வோா் இருமடங்கு அதிகரிப்பு..!

இந்தியாவில் இருந்து துபாய்க்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
இத்தகவலை துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021-ஆம் ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு 4.09 லட்சம் போ் சுற்றுலாப் பயணிகளாக சென்றுள்ளனா். நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்த எண்ணிக்கை 8.58 லட்சமாக அதிகரித்துவிட்டது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் பல்வேறு நாடுகளில் இருந்து துபாய்க்கு மொத்தம் 71.2 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனா். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமாா் 3 மடங்கு அதிகமாகும். துபாய் நகருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கும் பெரிதும் உதவிகரமாக உள்ளது. சா்வதேச அளவில் அதிகம் விரும்பப்படும், அதிக சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக துபாயை மாற்றும் இலக்கை நோக்கிய பயணம் நடைபெற்று வருகிறது என்று துபாய் சுற்றுலாத் துறை கூறியுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் துபாய்க்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். இதற்கு அடுத்து மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் இருந்து 34 சதவீத சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு பயணம் மேற்கொள்கின்றனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிா்வாகக் குழு தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்ட அறிக்கையில், ‘சா்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் இடமாக துபாய் பல ஆண்டுகளாக மேம்படுத்தி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

Related Articles

Back to top button
error: Content is protected !!